
சிதம்பரத்தில் கவரிங் நகை தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இதனையொட்டி தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், சிதம்பரம் கவரிங் நகை வியாபாரிகள், நகை உற்பத்தியாளர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்றச் சங்கம், சிதம்பரம் கவரிங் நகை வியாபாரிகள் சங்கம், கவரிங் நகை உற்பத்தியாளர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்றச் சங்கத்தின் மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க செயலாளர் ராமச்சந்திரன், கவரிங் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன், நிர்வாகிகள் ராஜ்குமார், சாம்ராஜ், நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் திமுகவின் தேர்தல் அறிக்கையான 214 இல் சிதம்பரத்தில் கவரிங் நகை சிறப்பு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிதம்பரம் லால்புரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ 1 கோடியே 24 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கவரிங் நகை சிறப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும் கவரிங் நகைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.