
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், கடந்தாண்டு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் சீமான் மீது நடவடிக்கை வேண்டும் என்று வழக்கறிஞர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவ்வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (16-04-25) வந்தது. அப்போது நீதிபதி, ‘சீமான் பேசிய பேச்சுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரைக்கும் 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் அவருடைய பேச்சைக் கேட்கவில்லையா? இப்போது தான் அவருடைய பேச்சைக் கேட்கிறீர்களா?’ என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘பென்டிரைவில் கொடுக்கப்பட்ட சீமான் பேசிய பேச்சு தொடர்பான வீடியோக்களை முழுமையாக பார்த்த பிறகு, இந்த வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கூறி இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.