
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் சுமன் துபே உள்ளிட்ட சிலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு (25.04.2025) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் முழுமையாக எதிர்த்து வாதாடப்படும்.
இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக எதுவும் இல்லாததால், இதுபோன்ற விஷயங்களின் மூலம் அரசாங்கம் தன்னையும் அதன் அரசியல் பழிவாங்கும் பிரச்சாரத்தையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.