
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைந்தது. அப்போது அக்கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தி.மு.க சார்பில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை சீட் வழங்குவதாக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (16-04-25) நேரில் சந்தித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “மாநிலங்களவை சீட்டுக்காக நன்றி தெரிவிக்க வந்தேன் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது கட்சியில் முடிவு செய்து யார் என்று முடிவாகி அறிவிக்கும்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது நன்றி சொல்வதற்காக அல்ல, கொண்டாட வந்திருக்கிறோம். தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு போட்ட வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன். இந்த தீர்ப்பு நமக்கு சாதகமானது என்று சொல்வதை விட, இந்தியாவிற்கே ஒரு தீர்ப்பை, இவர்கள் போட்ட வழக்கில் வந்திருக்கிறது என்பதால் கொண்டாடப்பட வேண்டியவர் இவர்கள். அந்த கொண்டாட்டத்திற்காக தான் நான் வந்தேன்.
தேசிய அளவில் இந்த வெற்றி மற்றவர்களுக்கும் பிரயோஜனம்படும்படி கொண்டாட வேண்டும் என்பதை முதல்வரிடம் சொன்னேன். சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் 1 வருடம் இருப்பதால் அதைப் பற்றி அவசரப்பட வேண்டியதில்லை” என்று கூறினார். அதிமுக பா.ஜ.கவோடு கூட்டணி சேர்ந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “அதை பற்றி நீங்கள் பேசுங்கள்.. நிறைய பேசுங்கள்” என்றார்.