
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியினரையே கதிகலங்க வைத்துள்ளது.
யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்தது. இந்த சூழலில்தான் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. அப்போது அந்த நிறுவனத்தை யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர்.
அசோசியட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை வெறும் ரூ.50 லட்சத்திற்கு அபகரிக்கும் நோக்கோடு ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் செயல்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி பாட்டியாலா ஹெள்ஸ் நீதிமன்றத்தில் புகார் மனுவும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த பணப் பரிமாற்றத்திற்கு மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும் காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சுமன் துபே ஆகியோர்களும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டதை தொடர்ந்து, ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்ததது. மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத்தலைவருமான சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு (25.04.2025) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.