இந்தியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்தாண்டு முதல் நடைபெற்று வந்தநிலையில், கடந்த மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-17 வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே அரோரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; 15-17 வயதிலான 7.4 கோடி சிறார்களுக்கு ஜனவரி இறுதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் பிப்ரவரி தொடக்கத்தில் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி, அதனை மாத இறுதியில் முடிக்க முடியும்.
12 முதல் 14 வயதானோருக்குப் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க விரும்புகிறோம். இவ்வாறு கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே அரோரா கூறியுள்ளார்.