
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி விலைமாதர்கள் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கண்டிக்கப்பட்டு வந்தது.
திமுகவிலேயே இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.