கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாலக்காடு நகராட்சியின் 52 வார்டுகளில் 28 இடங்களை வென்ற பா.ஜ.க., பாலக்காடு நகராட்சியையும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பா.ஜ.க உறுப்பினர்கள், அமித்ஷா மற்றும் மோடியின் பேனரையும் மலையாளத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்ட பேனரையும் நகராட்சிக் கட்டிடத்தின் மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டனர். இது சர்ச்சையைக் கிளப்பியது.
அதே நேரத்தில், பாஜக மாநிலச் செயலாளர், பாலக்கட்டில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பேரணியின் வீடியோவை ‘பாலக்காடு கேரளாவின் குஜராத்’ என்ற தலைப்பில் வெளியிட்டதை அடுத்து, இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது. நகராட்சிக் கட்டிடத்தின் மேல் 'ஜெய் ஸ்ரீ ராம்' எழுதப்பட்ட பேனர் தொங்கவிடப்பட்டது தொடர்பாக, கேரள போலீசார் பா.ஜ.க உறுப்பினர்கள் சிலரை விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் மாணவர் அமைப்பினர், இன்று பேரணியாகச் சென்று பாலக்காடு நகராட்சிக் கட்டிடத்தின் மேல், இந்தியத் தேசியக் கொடியைப் பறக்கவிட்டனர். மேலும் அவர்கள் பேரணியின் போது, இது ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அல்ல. நகராட்சிக் கட்டிடம். இது கேரளா அல்ல குஜராத் என்ற பேனரை ஏந்தியிருந்தனர்.