
பிரசவத்திற்கு ஒரு நாள் முன்னதாக மனைவியைக் கொன்று கணவன் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஞானேஷ்வர ராவ். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஞானேஷ்வர ராவும், அவரது காதலி அனுஷாவும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும், ஒரு தனியார் காலணியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அனுஷாவிற்கு நேற்று (14-04-25) பிரசவம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதனால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்த ஞானேஷ்வர் ராவ், மனைவி அனுஷா திடீரென்று கீழே மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த அனுஷாவின் பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அனுஷாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அனுஷா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதைக் கண்டறிந்தனர். ஞானேஷ்வர் கடந்த சில மாதங்களாக அனுஷாவோடு நெருங்கி பழகாமல் இருப்பதாகவும், அது குறித்து கேட்கும் போதெல்லாம் தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி, தன்னை விட்டை பிரியுமாறு மனைவியிடம் ஞானேஷ்வர் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் அனுஷா தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஞானேஷ்வரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மனைவியை கொலை செய்தது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டார். மனைவி தன் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்ததாகவும், அதே போல் சம்பவம் நடந்த தினத்தன்றும் சண்டையிட்டதால் ஆத்திரத்தில் அனுஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஞானேஷ்வர் ராவ் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.