
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரியில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அனுப்பிரியா(18) என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவமனையில் உள்ள 4 ஆவது கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடந்துள்ளது. மதிய இடைவேலையில் அனைத்து மாணவர்களும் உணவு அருந்த சென்றுள்ளனர். பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் பையில் இருந்து ரூ.1,500 மாயமாயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து பேராசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அனுப்பிரியா மட்டும் தனியாக அந்த அறையில் இருந்து வெளியே வருவது தெரியவந்தது. இதனால் அந்த மாணவி பணத்தை எடுத்திருக்கலாம் என்று பேராசிரியர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் உள்ள அறையில் வைத்து கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சக மாணவர்கள் முன்னிலையில் அனுப்பிரியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் மதியம் 2 மணி முதல் 4.30 வரை அனுப்பிரியாவிடம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால், அனுப்பிரியா தான் எந்த தவறும் செய்யவில்லை, யார் பணத்தையும் எடுக்கவில்லை என்று தொடர்ந்து மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரி நேரம் முடிந்து மற்ற மாணவ மாணவிகள் வீட்டிற்கு திரும்பிய பிறகும் அனுப்பிரியாவை விடாமல் கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் விசாரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் அனுப்பிரியாவை வீட்டிற்கு செல்லும்படி அனுப்பியுள்ளனர். மிகுந்த சோகத்துடனும் அவமானத்துடனும் வெளியே வந்த அனுப்பிரியா 4வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். திருட்டு பட்டம் சுமத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் பேராசிரியர்களை சிறைபிடித்து கற்களை வீசி கல்லூரி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனிடையே தகவலின் பேரில் கோவைக்கு விரைந்து வந்த மாணவியின் தாய் வானதி அனுப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மாணவி இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.