தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் நேற்று என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 27- ஆம் தேதி ஐதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இவர்கள் நால்வரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கலவையான கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.