![Pieces of meat lying in the temple in hyderabad](http://image.nakkheeran.in/cdn/farfuture/5qnWbcHAcaMljWdMfqyLpWVfbLuftN3Iaap9D8U2Ews/1739429217/sites/default/files/inline-images/nonveg.jpg)
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் தப்பச்சபுத்ரா பகுதியில் ஹனுமான் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (12-02-25) இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் அருகே இறைச்சித் துண்டுகள் கிடந்துள்ளது. இதனை கண்ட கோயில் அர்ச்சகர், உடனடியாக கோயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில், கோயிலில் இறைச்சித் துண்டுகள் கிடந்துள்ளது என்ற செய்தி ஊர் முழுவதும் பரவி கோயிலில் வெளியே ஏராளாமானோர் கூடினர்.
இதனையடுத்து, கோயிலில் யாரோ சில விஷமிகள் தான் இறைச்சித் துண்டுகளை வீசியிருப்பார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜ.கவினர் இந்த விஷயத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாய் அல்லது பூனை போன்ற விலங்கு அந்த இறைச்சியை உள்ளே கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர். இருப்பினும் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங், போலீசார் கூற்றை ஏற்காமல் இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கோயிலில் இறைச்சித் துண்டுகளை கிடந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகள் வெளிவந்துள்ளது. அதில், நாய் கவ்வி வந்த அசைவத்தின் மீதியை பூனை கோயிலுக்குள் போட்டிருப்பது பதிவாகியுள்ளது. மத ரீதியாக பிரச்சனை எழும் என மக்கள் அஞ்சிய நிலையில் தற்போது வெளியான சிசிடிவி காட்சி மூலம், அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.