உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டிற்குச் செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை (மேற்கு பிரிவு) செயலாளர் தன்மயா லால் கூறுகையில், " போலாந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - போலாந்து இடையேயான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த பயணம் அமைய உள்ளது.
மேலும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 23 ஆம் உக்ரைனுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் 30 ஆண்டுகளுக்கும் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.