தமிழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏவான அ.ராஜாவின் வெற்றி கேரள உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சி வெற்றி பெற்று அரசமைத்தது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜாவின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதியான தேவிகுளத்தில் அ.ராஜா காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜாவின் வெற்றி செல்லாது எனக் கூறி காங்கிரஸ் கட்சியின் குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், பட்டியல் இனத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால் தேர்தலில் போட்டியிட்ட ராஜாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட போலியான சாதி சான்றிதழையும் சமர்ப்பித்து அ.ராஜா போட்டியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அறிவித்துள்ளது. அதில், தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.ராஜாவின் வெற்றி செல்லாது என்றும், தனித்தொகுதியில் போட்டியிட அ.ராஜா தகுதியற்றவர் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கேரள சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. மேலும் அ.ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த அ.ராஜா பதவி ஏற்கும் போது தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றதால் எம்.பி. சு.வெங்கடேசன் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.