!['Edappadi is leading AIADMK in the path of MGR and J.' - R.P. Udayakumar interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/fvGBQkuLmIlvvZs4HVFTJzDdSvxD7HBiXDj3-9dRZWE/1739444233/sites/default/files/inline-images/a2529_0.jpg)
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு-அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டுவர 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ. 3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளைத் தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இது பேசுபொருளானது
அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆரின், பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (12.02.2025) நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கிய போது பல்வேறு சோதனைகள் இருந்தது. இன்று பிறந்தநாள் காணுகிறோம் என்று சொன்னால் அந்த தலைவனுக்கு வந்த சோதனை எந்த தலைவருக்கும் வந்திருக்காது. நான் எத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எத்தனை தலைவர்களை சந்தித்து விட்டு இந்த களத்தில் நிற்கிறேன் என்பதும் மக்களுக்கு தெரியும். வந்திருப்பவர்கள் ஏதாவது கிடைக்குமா என நினைக்கிறீர்கள். கிடைக்காது. கவலைப்பட தேவையில்லை. நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாதை. எனது வழி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவும் காட்டிய வழிதான். அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் நின்று பேசி இருக்க இயலாது” எனப் பேசியிருந்தார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இன்றைக்கு எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் அதிமுகவில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம். மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கம் ஜெயலலிதா. அவர் சொன்னது போல் மக்களால் நான் மக்களுக்காக நான் என வாழ்ந்த தாரக மந்திரத்தில் உங்களுக்காக நான் உங்களுக்காகவே நான். எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்.
!['Edappadi is leading AIADMK in the path of MGR and J.' - R.P. Udayakumar interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/wsy1D3VGsijXYAXg6YmLFr3akZzV8Dh6kp5ABM-kQ6U/1739444252/sites/default/files/inline-images/a2537.jpg)
இல்லாத நிலை வேண்டும் என்று உழைத்தார். அமைதி வளம் வளர்ச்சி என்று தாரக மந்திரத்தோடு உழைத்த ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார். இது சோதனை என்று யாரும் சொல்ல வேண்டாம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உழைத்துக் கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவம் தான் எடப்பாடி பழனிச்சாமி. வாக்காளர்கள், இளைஞர்கள் மாணவர்கள், விவசாய பெருமக்களைச் சந்திப்போம். வீடு வீடாகச் சென்று, வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்போம். களத்தில் நேரில் சந்தித்து உண்மையை எடுத்துச் சொல்வோம்” எனப் பேசி இருந்தது செங்கோட்டையனுக்கான பதில் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை குன்னத்தூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். வீடியோ வெளியிட்டது யாருக்காக? என செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார். அதில் அவர் பேசுகையில், ''குப்பனும் சுப்பனும் சாமானியனும் இன்றைக்கு அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடிக்க முடியாது என்று சொன்னால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்துவிட்டு போகலாம். ஜனநாயகத்தை வெல்ல செய்வதற்காக தான் தேர்தல். ஆனால் அதற்கு பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை இன்றைய இளைய சமுதாயமும், தாய்மார்களும், மகளிர்கள், ஒட்டு மொத்த வாக்காளர்கள், தமிழர்கள் விழிப்புணர்வோடு எச்சரிக்கையோடு அணுக வேண்டிய தருணம் இது. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் தான் அதிமுகவை வழிநடத்தி செல்கிறார் இபிஎஸ். அதிமுக சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமைக் குரல் தமிழகத்தை நடுநடுங்க செய்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் இன்றைக்கு அதற்கு பல்வேறு காது, மூக்கு வைத்து பல்வேறு விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை திறந்த மனதோடு சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமி இரண்டு கோடி தொண்டர்களையும் வழி நடத்துகிறார். யாருக்கும் அழைப்பு கொடுப்பதற்காக இந்த வீடியோ பதிவு வெளியிடப்படவில்லை, யாருக்கும் மனது புண்படும் வகையில் பேசவில்லை. திண்ணை பிரச்சாரத்தை கொண்டு செல்லவே வீடியோ வெளியிட்டேன்'' என்றார்.