Skip to main content

உ.பி.யில் பரபரப்பு; ரிஷப் பந்த் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதலியுடன் தற்கொலை முயற்சி!

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

Man Who Saved Rishabh Pant's Life Takes attempt lost lose With Girlfriend

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கினார். அப்போது அவரை அந்த விபத்தில் இருந்து இரு இளைஞர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரைக் காப்பாற்ற உதவியாக இருந்தனர். இந்த நிலையில் ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றிய இருவரில் ஒருவரான ரஜத் குமார் தனது காதலியுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாஃபர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ரஜத் குமார். இவர் அதே பகுதியில் உள்ள மனு காஷ்யப் என்ற இளம்பெணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவீட்டாரும் ரஜத் குமார் மனு காஷ்யப் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இருவரது வீட்டிலும் அவர்களுக்கு வெவ்வேறு நபர்களுடன் திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். இருப்பினும் ரஜத் குமாரும், மனு காஷ்யப்பும் தொடர்ந்து பெற்றோர்களை தங்களது காதல் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், கடைசிவரை அவர்கள் சம்மதிக்காமல் பிடிவாதமாக இருந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(11.2.2025) அன்று ரஜத் குமாரும், மனு காஷ்யப்பும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சித்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனு காஷ்யப் பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் ரஜத் குமார் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனு காஷ்யப்பின் தாய், தனது மகளை கடத்திச் சென்று ரஜத்குமார் கொலைசெய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்