திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியை சோ்ந்தவா்கள் பிரேம்குமாா்- ரமாதேவி தம்பதிகள். குருவாயூா் கிருஷ்ணன் பக்தரான இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் கிருஷ்ணனிடம் முறையிட்டு வணங்கி வந்தனா். இந்த நிலையில் அவா்களின் ஆசைக்கும் நம்பிக்கைக்கும் பலனாக ரமாதேவியின் ஒரே பிரசவத்தில் 1995 நவ.18- ம் தேதி 5 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு ஆண் 4 பெண்கள் பஞ்சரத்தினங்கள் பிறந்து விட்டது என கூறி அந்த தம்பதியினா் ஆனந்தமடைந்தனா்.
உத்திரம் நட்சத்திரத்தில் அந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஆண் மகனுக்கு உத்ரஜன் என்றும் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என பெயாிட்டனா். ஒரே பள்ளி கல்லூாியில் சோ்த்து படிக்க வைத்தனா். அந்த ஊரே பஞ்சரத்திரன குழந்தைகள் என அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறு பெட்டி கடை நடத்தி வந்த பிரேம்குமாா் சாியான வருமானம் இல்லாததால் கடன் ஏற்பட்டு அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாா். அப்போது அந்த குழந்தைகளுக்கு 9 வயது.
இதனால் அந்த குழந்தைகளின் எதிா்காலத்தை நினைத்து அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் லோக்கல் அரசியல்வாதி ஒருவாின் முயற்சியில் தாயாா் ரமாதேவிக்கு அரசு கூட்டுறவு துறையில் வேலை கிடைத்தது. ரமா தேவி கஷ்டப்பட்டு அந்த குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் வயது வரை ஆளாக்கினாா். மேலும் ஏற்கனவே ஆரம்பத்தில் நினைத்தப்படி 5 குழந்தைகளுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதுவும் குருவாயூா் கோவிலில் வைத்து தான் திருமணம் என முடிவு செய்து வரன் தேடினாா்.
அவா் நினைத்த படி 5 பேருக்கும் வரன் கிடைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 5 பேருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் கரோனா தாக்கத்தால் திருமணம் தடைப்பட்டது. இதனால் நவ.26-ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் மகனுக்கு வரன் சில பிரச்சினைகளால் மாறியது. இதனால் 4 மகளுக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தாா். ஃபேஷன் டெக்னாலஜி முடித்த உத்ராவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் ஆயூரை சோ்ந்த அஜின், ஆன்லைன் ஊடக பிாிவு செய்தியாளா் உதாராவுக்கு கோழிக்கோடு சோ்ந்த பத்திாிக்கையாளா் மகேஷ், திருவனந்தபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசியன் உத்தமாவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் வட்டியூா்காவை சோ்ந்த வினீத் ஆகிய 3 பேருக்கு மட்டும் அன்று திருமணம் நடந்தது.
எா்ணாகுளத்தில் அமிா்தா மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் உத்ரஜாவுக்கு பேசி முடிக்கப்பட்ட குவைத்தில் ஒரு மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் பத்தணம்திட்டையை சோ்ந்த ஆகாஷ்க்கு கரோனா சூழ்நிலையால் ஊருக்கு வர விசா கிடைக்காததால் இவா்களின் திருமணம் மட்டும் தடைபட்டது. இந்த திருமணத்தில் உறவினா்களை விட இந்த பஞ்சரத்தினம் குழந்தைகளை கேள்வி பட்டவா்கள் அதிகம் போ் கலந்து வாழ்த்தினாா்கள்.