Skip to main content

இன்ஜெக்டபிள் கருத்தடை முறை வரமா - சாபமா?

Published on 15/09/2017 | Edited on 15/09/2017


தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின்கீழ், சுகாதாரத்துறை அமைச்சகம் ‘இன்ஜெக்டபிள் கான்ட்ராசெப்டிஸ்’ எனப்படும் ஊசி வடிவிலான கருத்தடை மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமான வேகத்திலேயே தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 2,136 மையங்களில் இந்த ஊசி போடப்பட்டுவருகிறது.

உலகிலேயே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. 1952-லேயே குடும்பக்கட்டுப்பாடு பற்றி இந்தியா யோசிக்கத் துவங்கிவிட்டது. ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’, ‘ஒன்று பெற்றால் ஒளிமயம்’ என்பதுபோன்ற விளம்பரங்கள் சுவர்களையும் பத்திரிகைகளையும் ஆக்கிரமித்த காலங்களையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம்.

காலமாற்றத்தைப் போலவே குடும்பக்கட்டுப்பாடு முறைகளிலும் நாளுக்குநாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குழந்தை போதுமென நினைக்கும் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையும் ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளியை அதிகரிக்க  நினைப்பவர்களுக்கு ஆணுறையும் இருக்கவே இருக்கிறது.

ஆனாலும், பாரம்பரியப் பெருமை பேசும் இந்தியர்கள் ஆணுறை வாங்க வெட்கப்பட்ட காலம் உண்டு. இன்றைக்கும் யாருமில்லாத நேரத்தில் கிசுகிசுப்பான குரலில் கடைக்காரரிடம் கேட்டு வாங்கிச்செல்லும் ரகசியப்பொருளாகவே அது தொடர்கிறது

இதனால் இடைக்கால கர்ப்பங்களைத் தவிர்க்க காப்பர்-டி, டயப்ரம், பெர்த் கண்ட்ரோல் ஸ்பான்ஜஸ் என பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. தவிர கருத்தடை மாத்திரைகளையும் சிலர் பயன்படுத்துவதுண்டு. இந்த சமயத்தில்தான் தற்போது வந்திருக்கும் ஊசி வடிவிலான கருத்தடை மருந்து வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக குழந்தை பிறந்த ஆறு வாரமான பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். மற்ற பெண்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு போட்டுக்கொள்ளலாம். ஒரு முறை ஊசிபோட்டால் 3-லிருந்து 4 மாதங்கள் கர்ப்பமாகும் அபாயமில்லை. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த ஊசி போடப்படுகிறது.


எப்படித் தடுக்கிறது?

மெட்ரோக்சிபுரோஜெஸ்ட்ரான் அசிட்டேட் எனப்படும் இந்த ஊசி உங்களது ஓவரி கருமுட்டையை வெளியிடுவதைத் தடுத்து கருவுறுதலைத் தடுக்கிறது. செர்விகல் மியூகஸ் எனும் கருப்பைவாய் சளியை அடர்த்தியாக்கி, விந்துவானது கருமுட்டை பக்கம் வராமல் பார்த்துக்கொள்கிறது. தவிரவும், யூட்ரின் லைனிங்கை மெலிதாக்கி உங்களது கருமுட்டை கருப்பையில் வந்து பதிந்துகொள்வதைத் தடுக்கிறது. ஒரு ஊசிக்கு மூன்று மாதம் என, வருடம் முழுவதும் கர்ப்பமாகாமல் இருக்க நான்கு முறை ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மாதாந்திர பீரியடின்போது ரத்தப் போக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். சிலருக்கு ரத்தப் போக்கே சுத்தமாக நின்றுபோகவும் கூடும். தொடர்ந்து 1 வருடம் பயன்படுத்துபவர்களுக்கு பீரியடே நின்றுபோகக்கூடும். ஆனால் அதைக்கண்டு பயப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். மறுபடி இயல்பாக மாதாந்திரப் போக்கு வர 9 லிருந்து 10 மாதங்கள் ஆகலாம்.

பக்கவிளைவுகள் என்ன?

உடல் எடை அதிகரிப்பு

தலைவலி

படபடப்பு

வயிற்று வலி

தலைசுற்றல்

களைப்பு அல்லது மயக்கம்

எலும்பு அடர்த்தி குறைதல்

ரத்த உறைவு

சமயங்களில் கர்ப்பப்பைக்கு வெளியே கருத்தரித்தல் போன்ற பக்கவிளைவுகள் நேரலாமென கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே எலும்பு அடர்த்திக்குறைவு இருப்பவர்கள் இந்த ஊசியைப் பயன்படுத்தாமலிருப்பதே நல்லது. 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த கருத்தடை முறையைத் தவிர்த்தால் கர்ப்பப்பை புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

கர்ப்பமாக நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், இதய, சிறுநீரக, கல்லீரல் நோயுடையவர்கள், இதயநோய் பாதிப்பு, வாதப் பாதிப்பு ஆளானவர்கள், இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு இந்த மருந்து ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகலாம். அவர்களும் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

இந்தியாவில் சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதத்தைக் கேட்காமலே கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்ததாக பல இடங்களிலும் குற்றச்சாட்டு எழுந்த கதைகளும் உண்டு. காப்பர்-டி விவகாரத்தில்கூட, பிரசவத்துக்குப்பின், பெண்களது சம்மதமில்லாமலே காப்பர்-டி பொருத்தப்பட்டதாக குமுறுபவர்களும் உண்டு.


இந்த ஊசி விவகாரத்திலாவது, அதன் பக்கவிளைவுகளை பொறுமையாக எடுத்துச்சொல்லி குத்தவேண்டும். மாறாக, ஏதாவது சாதனை இலக்கை எட்டவேண்டும் என்ற குறிக்கோளில், அகப்பட்டவர்களுக்கெல்லாம் பயன்படுத்திவிடக்கூடாது.

- மணியன்

சார்ந்த செய்திகள்