மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், விவசாய சங்கத் தலைவர்கள், தங்கள் போராட்டத்திற்கு மாநிலம், மாநிலமாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் டெல்லியின் காசிப்பூர் எல்லையில், விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்தி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் திகைத் நேற்று (02.04.2021) ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவரது கார் கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறை தடுப்புக்காவலில் கைது செய்ததோடு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகேஷ் திகைத் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் குறித்து பேட்டியளித்த ராகேஷ் திகைத், தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “இதற்கு மத்திய அரசே காரணம். வேறு யாராக இருக்க முடியும்? இது அவர்களது இளைஞர் அணி. ராகேஷ் திகைத்தே திரும்ப செல் என்கிறார்கள். நான் எங்கு செல்வது? அவர்கள் கற்களை எறிந்தார்கள். லத்திகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் ஏன் எங்களுடன் சண்டையிடுகிறார்கள். விவசாயிகள், அரசியல் கட்சி அல்ல" என தெரிவித்துள்ளார்.