
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் முருகேசன் (வயது 20). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று (04.04.2025) இரவு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக பைக்கிள் வந்த ஒரு மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பார்த்த போது முருகேசன் உயிர் பிரிந்திருந்தது. அங்கு வந்த போலிசார் உடனே முருகேசன் சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞரான முருகேசனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவியதால் அவரது உறவினர்கள் கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலை நடந்ததும் மூடப்பட்ட டாஸ்மாக் கடை கதவுகளை பெண்கள் அடித்து கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மழையூரில் கடையடைப்பும் செய்யப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானதையடுத்து போலிசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை செய்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞர் காதலித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்ற நிலையில் பெண்ணை மீட்ட முருகேசன் மற்றும் உறவினர்களை மிரட்ட காதலனுக்கு ஆதரவாக கருப்பட்டிப்படி கிராமத்தில் இருந்து சில இளைஞர்கள் அரிவாள்களுடன் மழையூர் வந்ததையறிந்த முருகேசன் உறவினர்கள் திரண்டதால் அனைவரும் தப்பி ஓடிவிட்ட நிலையில் ஐயப்பன் என்ற ஒரு இளைஞர் மட்டும் அரிவாளுடன் சிக்கிக் கொண்டதால் முருகேசன் உறவினர்கள் ஐயப்பனை கவனித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் போலிசார் வழக்கு ஏதுமின்றி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஐயப்பனுக்கு அவமானமும், காதலனுக்கு ஏமாற்றமும் ஏற்பட்ட பகைமை வளர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முருகேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகையை தீர்த்துக் கொள்ள கூலிப்படை உதவியுடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலிசாரின் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலிசார் நியமிக்கப்பட்டிருந்தனர். மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டது.

இரவோடு இரவாக சிலரை விசாரனை வளையத்திற்குள்ளும் கொண்டு வந்தனர். முருகேசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க சென்றுகொண்டிருந்த கருப்பட்டிப்பட்டி கள்ளர் தெரு சக்திவேல் மகன் ஐயப்பன் (வயது 19), கர்ணன் மகன் முகசீலன் (வயது 19) ஆகிய இருவரையும் கைது செய்து போலிசார் நடத்திய விசாரனையில்... ஐயப்பன் கூறும் போது, “ போன வருசம் முருகேசன் உறக்காரப் பெண்ணை என் நண்பன் காதலித்து கூட்டி போன போது அந்த பெண்ணை பிரித்துவிட்டு என் நண்பன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அதனால் என் நண்பன் எங்களுக்கு தகவல் சொன்னால் உடனே நாங்கள் பலர் அரிவாள், கத்தியுடன் மழையூர் வந்த போது முருகேசன் உறவினர்கள் அதிகமாக நின்றதால் எங்களுடன் வந்தவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் நான் மட்டும் சிக்கிக் கொண்டேன். அரிவாளுடன் சிக்கிய என்னை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் என்னை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவமானப்படுத்திவிட்டனர். அதன் பிறகு காவல் நிலையம் அழைத்துச் சென்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினார்கள். இருந்தும் எனக்கு அந்த சம்பவம் உருத்தலாகவே இருந்ததால் உள்ளூரில் இருக்க முடியாமல் திருப்பூர் பக்கம் போய்விட்டேன். ஆனால் அந்த வடு மறைவில்லை. அதனால் அரிவாளால் வெட்ட பயிற்சி எடுத்துகிட்டேன்.

எப்படியும் ஆளை போடனும் என்ற திட்டத்தில் வந்த நான் நேற்று அந்த ஊர் பள்ளியில் ஆண்டுவிழா என்பதால் கடைவீதியில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதை சாதகமாக பயன்படுத்தி வழக்கமாக வேலை முடிந்து முருகேசன் டாஸ்மாக் கடைக்கு வருவதை கவனித்துக் கொண்டிருந்தேன். முகசீலனை பைக் ஓட்டச் சொல்லி அரிவாளோடு வந்து டாஸ்மாக் கடை அருகே தனியாக நின்ற முருகேசனை வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்கமாட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு அதே பைக்கில் ஏறி தப்பிச் சென்றேன்” என்று பரபரப்பான வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் முருகேசன் கொலையில் ஐயப்பன், முகசீலன் மட்டுமின்றி வேறு சிலரும் சம்மந்தப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும், என்றும் கொலை நடந்த டாஸ்மாக் கடை அருகிலேயே முருகேசன் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து முருகேசன் உறவினர்கள் அவரது சடலம் ஏற்றிவந்த அமரர் ஊர்தியை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு போலிசார் மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டடு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.