Skip to main content

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தற்கொலை

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

 ADMK ex-legislator Natarajan

 

புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தவர் நடராஜன். இவர் வில்லியனூர் பகுதியில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் இன்று மாலை நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை முதல் அவர் வீட்டிலிருந்து வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்திருக்கிறார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

குடும்பப் பிரச்சனை காரணமாக நடராஜனின் பிள்ளைகள் சொத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், கடந்த சில தினங்களாகவே அவர் வீட்டில் தனியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மன உளைச்சலில் இருந்த நடராஜன் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்த நடராஜன் கடந்த 1991 முதல் 2001 வரை 10 ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க.வின் மாநிலச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். பிறகு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்திருக்கிறார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லியனூர் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க சார்பில் மங்களம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்.

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரி அரசியல் கட்சியினர், அ.தி.மு.க.வினர் மற்றும் வில்லியனூர் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்