பெங்களூருவில் தங்கவைக்கப்பட்டுள்ள மத்தியப் பிரதேச அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க சென்ற திக் விஜய் சிங்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து விடுதிக்கு வெளியே அமர்ந்து திக்விஜய் சிங் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திக் விஜய் சிங்கை அம்ருதஹல்லி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், "சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையாக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்குச் செய்திகள் வந்தன. தனிப்பட்ட முறையில் நான் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசினேன். தாங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு அறைக்கும் முன்பாகவும் 24மணி நேரமும் காவலுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமல்ல, வெளியில் இருக்கும் எம்.எல்.ஏ க்களுக்கு கூட பாஜக தரப்பு 25 முதல் 30 கோடி வரை வழங்குவதாக கூறியுள்ளது" எனத் தெரிவித்தார். அவரது இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.