Skip to main content

மனைவியைக் கொன்றதாக சிறை சென்ற கணவர்; 3 ஆண்டுக்குப் பின் உயிரோடு வந்த ட்விஸ்ட்!

Published on 05/04/2025 | Edited on 05/04/2025

 

Husband who went to prison for thrash his wife and shocked to find her alive 3 years later

மனைவியை கொன்றதாக சிறைக்கு சென்ற கணவன் தனது மனைவி உயிரோடு இருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம் பசவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி மல்லிகே என்ற மனைவி இருந்தார். இந்த சூழ்நிலையில், மல்லிகேவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்பட்டது. இதனை அறிந்த சுரேஷ், அந்த உறவை கைவிடுமாறு தனது மனைவியிடம் பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால், அதற்கு எந்தவித பதிலும் மல்லிகே கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், திடீரென்று மல்லிகே காணாமல் போனார். தனது மனைவி மல்லிகேவை எங்கு தேடியும் கிடைக்காததால், சுரேஷ் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரித்து வந்த போலீசார், கடந்த 2022ஆம் ஆண்டு பெட்டபட்டணா பகுதியில் மல்லிகேவின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி சுரேஷை வரவழைத்தனர். இதனை கேட்டு அப்பகுதிக்குச் சென்ற சுரேஷுக்கு, அந்த எலும்புக்கூடுகள் அவரது மனைவியுடையது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், அந்த எலும்புக் கூடுகள் தனது மனைவி தான் என்று எண்ணி அதற்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். 

இருப்பினும், சுரேஷ் தான் தனது மனைவியைக் கொலை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். இதனை சுரேஷ் கடுமையாக மறுத்த போதிலும், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எலும்புக்கூடுகளின் டிஎன்ஏ பரிசோதனையில் மல்லிகேவின் குடும்பத்தினருடன் எந்த மரபணுவும் ஒத்துப்போகாமல் போனபோது தான் சுரேஷ் குற்றமற்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் ஆம் தேதி ஒரு ஹோட்டலில் தனது மல்லிகே உயிருடன் வேறொரு நபருடன் இருந்ததை தற்செயலாக சுரேஷ் கண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், மல்லிகேவையும், அந்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சில ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரியவந்தது. காவல்துறையின் அலட்சியத்தால், செய்யாத குற்றத்திற்கு சுரேஷ் சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்