
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. ஆனால் திடீரென்று நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகினார். மேலும், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
அதன் பின் நடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜக தனித்து 240 இடங்களை மட்டுமே கைப்பற்றிருந்தது. மக்களவையில் 272 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில், பா.ஜ.க அதற்கும் குறைவான இடங்களை கைப்பற்றி மைனாரிட்டியாக இருந்தது. அந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள், பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது.
இந்தாண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதிஷ் குமாரை துணை பிரதமராக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அஷ்வினி குமார் சவுபே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு மகத்தானது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை அவர் மேலும் வலுப்படுத்தி வருகிறார். அவர் துணைப் பிரதமராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அப்படி எனது விருப்பம் நிறைவேறினால், பாபு ஜக்ஜீவன் ராமுக்குப் பிறகு அந்த பதவியை ஏற்கும் பீகாரின் இரண்டாவது மகனாக நிதிஷ் குமார் இருப்பார்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக போட்டியிட விரும்பும் நிதிஷ் குமாரை மரியாதையுடன் வழியனுப்ப பா.ஜ.க விரும்புவதாக ஊடகங்களில் செய்தி பரவி வந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரான அஷ்வினி குமார் சவுபே இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.