Skip to main content

திடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 01/06/2020 | Edited on 02/06/2020

 

money


ஐநூறு கோடியோ? ஆயிரம் கோடியோ? 2,000 ரூபாய் பணக் கட்டுகள் பண்டல் பண்டலாக அந்தக் குடோனில் ஒரு ஓரமாகக் கிடந்திருக்கின்றன. டிரைவர், லோடு மேன்கள் என 15 பேர் அந்தக் கரன்ஸி பண்டல்களை எடுத்துச் சென்று பங்கு பிரித்து, ஆளாளுக்கு கோடீஸ்வரர்களாகி விட்டனர். இந்தத் திருட்டு பலமுறை நடந்தும், அந்த நிறுவனத்தின் முதலாளிக்கு எதுவும் தெரியவில்லை. தன்னிடம் வேலை பார்த்த டிரைவர் ஒருவருக்குப் பெரிய அளவில் திடீர் வசதிகள் வந்தது தெரியவர, அதன்பிறகுதான், ரூ.5 லட்சத்துக்கு மேல் திருட்டுப்போனதாக, அந்த நிறுவனத்தின் கணக்கு மேலாளர் மூலம், புகார் கொடுக்க வைத்திருக்கிறார்.
 


"கணக்கில் வராத கோடிகள் திருடப்பட்டதால், வெறும் 5 லட்ச ரூபாய் என்று பெயரளவுக்குப் புகார் அளித்துவிட்டு, காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம், திருடியவர்களிடம் கடுமையாக விசாரித்து மீட்கும் ஒவ்வொரு கோடிக்கும் இத்தனை பெர்சன்டேஜ் எனப் பேரம் பேசியிருக்கிறார். பல கோடிகள் சம்பந்தப்பட்ட வில்லங்க விவகாரமாக இருந்தும், கமுக்கமாக எல்லா வேலைகளும் நடந்து முடிந்ததற்குக் காரணம், தென்மாவட்ட தாடிக்கார அமைச்சரும் அந்த நிறுவன முதலாளியும் நெருக்கமானவர்கள் என்பதுதான். இந்தத் திருட்டு வழக்கில் கைது நடவடிக்கை கூட எடுக்கப்பட்டது. எல்லாமே கண் துடைப்புதான். இது நேற்றோ, இன்றோ அல்ல.. ஒரு வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது". என்றார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர்.
 

company


விருதுநகர் மாவட்டம், கீழராஜகுலராமன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சத்திரப்பட்டி - சங்கரபாண்டியபுரத்தில், பேண்டேஜ் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவரும் பிரிமியர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயர்தான் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. இதுகுறித்து விளக்கம் பெற, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரமணியைத் தொடர்பு கொண்டபோது, நமது லைனில் வந்தார், அக்கவுண்ட் மேனேஜர் பாலசுப்பிரமணியம். “எங்கள் நிறுவனத்தில் அப்படி ஒரு திருட்டு நடக்கவே இல்லை. இதுகுறித்து எழுதினால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று பேச்சின் தொடக்கத்திலேயே டென்ஷன் ஆனார்.

இவர்தான், கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். ஆனாலும், ஏனோ மறைத்துப் பேசினார். பிறகு "சரி.. எங்க முதலாளிகிட்ட பேசிட்டு உங்க லைனுக்கு வர்றேன்" என்றவர், அடுத்த சில நிமிடங்களில் நம்மைத் தொடர்புகொண்டு, "ஒரு சின்ன அமவுண்ட் திருடு போனது உண்மைதான். எல்லாத்தயும் ரெகவர் பண்ணியாச்சு. இந்த கேஸுல டிரைவர் பாண்டியும் அவரது நண்பர் செல்வமும் ஜெயிலுக்கெல்லாம் போனாங்க'' என்றபோது இடைமறித்து, "சில நூறு கோடிகள் என்றல்லவா காவல்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்?'' என்று கேட்ட மாத்திரத்தில் "எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...'' என்று குரலை உயர்த்தி லைனைத் துண்டித்தார். நாம் பேசிய விபரத்தை பாலசுப்பிரமணியம், நிர்வாக இயக்குநர் ராஜேந்திரமணியிடம் தெரிவித்தும், அவர் நம்மைத் தவிர்த்தார்.
 


பண மீட்பு விஷயத்தில் மேலதிகாரியின் உத்தரவுக்கு இணங்க, ராஜேந்திரமணிக்கு பெர்சனலாக உதவியதாகச் சொல்லப்படும் ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபனை தொடர்புகொண்டோம். "முகாந்திரம் இல்லாத விஷயத்துக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த அதிகாரியிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார். கீழராஜகுலராமன் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. கருத்தபாண்டியைத் தொடர்பு கொண்டோம். "என்னை எதுக்கு இதுல இழுத்துவிடறாங்க? இந்த வழக்குல விசாரணை நடத்தியதெல்லாம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம்தான்...'' என்று அவரும் நழுவினார்.

கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் (டிரைவர்) பாண்டி என்ற கட்ட பாண்டி மீது 9 மாத இடைவெளியில் பதிவான இரண்டு வழக்குகளும், சில திரைமறைவு விவகாரங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. ராஜேந்திரமணி வீட்டில் ஒரு அறையிலும், கம்பெனியில் ஒரு அறையிலும் திருடு போன தொகை ரூ.5 லட்சத்திற்கு மேல் என்று பதிவு செய்துள்ளனர். பணம் திருடியதில் தொடர்பும் முழுப்பங்களிப்பும் இருப்பதாக, கட்ட பாண்டி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது. இவர்களில், அந்த நிறுவனத்தில் டிரைவர் வேலை பார்த்த கட்ட பாண்டி, சில மாதங்களில் வீடுகள், நிலங்கள், வாகனங்கள் வாங்கியதோடு, ஆச்சரியமூட்டும் பணப்புழக்கத்தில் மூன்று மதுபான பார்களை ஏலம் எடுத்து நடத்தியதெல்லாம், தங்களிடமிருந்து திருடிய பணத்தில்தான் என்றே புகார் அளித்துள்ளனர். ரூ.5 லட்சத்தை திருடிவிட்டு, கட்ட பாண்டி ஒருவர் மட்டுமே, இத்தனை வசதி வாய்ப்புகளோடு செழிப்பாக வாழ்வதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்? அவருடைய கூட்டாளிகள் 14 பேருக்குப் பிரித்துக்கொடுத்த பங்கு எவ்வளவு? எனக் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
 

police


அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து குடோனில் பதுக்கிய பணம்தானே எங்கள் கண்களில் பட்டது? இதை நாங்கள் கொண்டுபோனது எப்படித் திருட்டு ஆகும்? அரசியல் மற்றும் அதிகாரபலத்தை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொண்டு என் மீது திருட்டுப் பழி போடுகிறாயா? என்கிற ரீதியில், என் மீது களவு கேஸ் கொடுத்து ஊருக்குள் வரவிடாம பண்ணிட்டீங்க? கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி நாலு மாசமாச்சு. ஒழுங்கா கேஸை வாபஸ் வாங்கு. இல்லைன்னா.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன்.. என்று மிரட்டிய வழக்கும் கட்ட பாண்டி மீது பதிவாகியிருக்கிறது.

‘பண மீட்பு விஷயத்தில் ராஜேந்திர மணிக்கு உதவி செய்தீர்களா? என்று கேட்பதற்காக, அந்தத் தாடிக்கார அமைச்சரை தொடர்ந்து தொடர்புகொண்டும், அவர் நம் லைனுக்கு வரவில்லை. அவரது உதவியாளர் "கலெக்டர் மீட்டிங்கில் அமைச்சர் இருக்கிறார்...'’ என்று சளைக்காமல் கூறினார். இந்த வழக்கில் காவல்துறையால் கடுமையாக விசாரிக்கப்பட்ட வர்களில் ஒருவரது உறவினர், அந்தப் பகுதியில் வசிக்கும் ஆளும்கட்சி அரசியல் பிரமுகரும் ஆவார். அவர் நம்மிடம் "மற்றவர்கள் சொல்வது போல இது அந்தத் தாடிக்கார அமைச்சரின் பணமாக நிச்சயம் இருக்காது. அந்த அமைச்சர் இவரை நம்பியெல்லாம் நூற்றுக் கணக்கான கோடிகளை இங்கே வைத்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த விவகாரத்தில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த உள்விவகாரம்’ வெளியேவராமல் பார்த்துக்கொண்டார்கள். ஆயிரம் கோடியெல்லாம் கிடையாது. காவல்துறை வட்டாரத்திலேயே சொல்கிறார்கள். கருப்புப் பணம் 350 கோடிதான்.
 

http://onelink.to/nknapp


ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியக்கூடிய இந்த நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் ‘சுத்தம்’ கிடையாது. ஐ.டி. ரெய்டில் சிக்கிவிடக்கூடாது என்று கரன்ஸி கட்டுகளை பண்டல்களாகக் கட்டி குடோனில் போட்டுள்ளனர். அவற்றை இன்னொரு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவதற்கு டிரைவரையும் லோடு மேன்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்போது தான், அட்டைப்பெட்டி பண்டல்களில் இருந்ததெல்லாம் பணம் என்பது தெரிந்து, திருடப்பட்டுள்ளது. பத்து லோடுகள் என்று பேசப்பட்டு, ஒரு லோடு (ரூ.35 கோடி) கொண்டு செல்லும் போதுதான், பணம் பங்கு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததால், பெரும்பாலான கரன்ஸி கட்டுகள் மீட்கப்பட்டுவிட்டன. இதெல்லாம் சி.பி.ஐ. அளவில் விசாரிக்க வேண்டிய பெரிய விவகாரம். சாதாரணமாக முடித்துவிட்டார்கள்'’ என்றார்.

கரோனா மிரட்டலோடு, ஊரடங்கு காலத்தில் ஏழைகள் பலரும் வயிற்றுப் பசியால் அலறிக்கொண்டிருக்க. பண்டல் பண்டலாகப் பணம் எங்கெங்கோ குடோன்களில் அடைந்து கிடப்பதை என்னவென்று சொல்வது?