மணிப்பூர் கொடூரம் குறித்து தன்னுடைய கருத்துக்களை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா நம்முடன் பகிர்கிறார்
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக ரோட்டில் இழுத்துச் சென்ற இதுபோன்ற சம்பவம் இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. பெண்கள் இன்று முன்னேறி வருகிறார்கள் என்று நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களை நிர்வாணமாகச் சாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்யும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதைப் பார்க்கும்போது உலக நாடுகள் என்ன நினைப்பார்கள்? பெண்ணைக் கொச்சைப்படுத்துவது தான் பழிவாங்கும் மனிதர்களின் மனநிலையாக இருக்கிறது.
இவ்வளவு கொடுமைகள் நடந்து பல காலம் ஆன பிறகு விசாரணை நடத்துவது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. வெளியே தெரிவதற்கு முன்பே ஆள்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்குத் துளியும் இல்லை. பெண்கள் அங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்கிற புகார் வந்த பிறகும் தேசிய மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்கினைப் பெற வேண்டும் என்பது மட்டும்தான் இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.
இதற்கான தீர்வைத் தேட பிரதமர் ஏன் முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதி, மதம், இனம் ஆகிய அடிப்படையில் மக்களைப் பிரித்து வாக்குகளைப் பெறுவது தான் இன்று நடந்து வருகிறது. சாதி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படுவதே இல்லை. அரசியல் கட்சிகள் சாதிய வாக்குகளை நோக்கித் தான் பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மணிப்பூரில் பெண்களுக்கு அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
இது போன்ற விஷயங்களை இனி யாரும் செய்யத் துணியக் கூடாது என்கிற வகையில் அந்த தண்டனை அமைய வேண்டும். பெண்களை இவ்வாறு நிர்வாணப்படுத்துவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வந்தது? இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிக விரைவாக இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற விஷயங்கள் இனி நடக்காமல் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.