நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிட, நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் சென்றோம். இறப்புச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, “சங்கு எங்கலே.. ஊதுலே..” என்று மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் ‘சவுண்ட்’ விட்டார் ஒருவர். அதற்கு அவர் “செத்த வீட்டுல நாங்க இப்ப சங்கு ஊதுறது இல்ல..” என்று சொல்ல, வாக்குவாதம் ஆனது. ஆனாலும், தான் சங்கு கொண்டு வரவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்த, ஆளாளுக்கு வசை பாடினார்கள். பலர் முன்னிலையில் அவர் கூனிக்குறுகி நின்றார்.
பின்னுக்குத் தள்ளப்பட்டோம்!
காயம் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்யும்போது, அந்த இடத்தில் உள்ள மயிரை மழிக்க வேண்டும் என்பதால், அந்தக் காலத்தில் மருத்துவர்கள் அனைவரும் சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். இத்தொழிலில் ஈடுபட்டு வந்த ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் அழைக்கப்பட்டனர். மருத்துவத்தை அந்தக்காலப் பெண்கள் வெகு சிறப்பாகப் பார்த்து வந்ததால், ‘பாட்டி வைத்தியம்’ என்ற சொல் இன்றுவரையிலும் பிரபலமாக விளங்குகிறது. பன்னிரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக, மருத்துவத் தொழிலைப் பார்த்துவந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்கத்தின் சட்டதிட்டம் காரணமாக, அத்தொழிலைத் தொடர முடியாமல் போனது. அதனால், மற்றொரு தொழிலான சவரத் தொழிலை வேறு வழியின்றி தொடர வேண்டியதாயிற்று.
காலப்போக்கில், சவத்துக்கு சவரம் செய்வது, சவத்தைக் குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுவது, சவ அடக்கத்தில் உதவுவது போன்றவை, மருத்துவ சமுதாயத்தினருக்கு ‘விதிக்கப்பட்ட’ சமூகக் கடமைகள் ஆயின. அதனால், மரணச் சடங்குகளில் சங்கு ஊதும் நடைமுறை வந்தது. இறந்தவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைப்பதற்காக, மருத்துவ சமுதாயத்தினர் சங்கு ஊதினர்.
ஊதி ஊதி உயிரைவிட்டோம்!
மரணச் சடங்குகளின்போது சங்கு ஊதாதற்கான காரணத்தை நம்மிடம் விளக்கினார் திருநெல்வேலி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் சந்திரன்.
“சாவு வீட்டில் எங்கள் சமுதாயத்தினரை “ஊது.. ஊது..” என்று ஆளாளுக்கு விரட்டுவார்கள். மூச்சை இழுத்து ஊத வேண்டும். அப்போதுதான் ஊதி முடித்திருப்போம். புதிதாக சாவு வீட்டுக்கு வருபவர் “என்ன சும்மா உட்கார்ந்திருக்க.. ஊது.. இன்னும் நெறய ஆளுங்க வரணும்.” என்பார். நாங்களும் ஊதுவோம். ஆனாலும், தம் கட்டி சங்கு ஊதும் எங்களை இளைப்பாற விடாமல், ஆளாளுக்குத் தொந்தரவு தந்தபடியே இருப்பார்கள். “மேலே இருக்கிற சிவனுக்கு நீ ஊதுற சங்கு சத்தம் கேட்கணும். அப்பத்தான், செத்தவருக்கு மோட்சம் கிடைக்கும்.” என்று இஷ்டத்துக்குப் பேசுவார்கள். இப்படித்தான், இங்கே தென்காசி பக்கத்தில் காசிமேஜர்புரத்தில் ஒரு இழவு வீட்டில், மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை விடாமல் ஊதச் சொன்னார்கள். அவர் சங்கு ஊதும்போதே மயங்கி விழுந்து இறந்துபோனார். இது நடந்து ஒரு வருடமாகிவிட்டது. அன்றிலிருந்து, சாவு வீட்டில் நாங்கள் யாரும் சங்கு ஊதுவதில்லை. சங்கமே போட்ட தீர்மானம் இது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மருத்துவ சமுதாயத்தினருக்குத்தான் இந்தக் கட்டுப்பாடு. மற்ற மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊர்களில், இப்போது சங்கு ஊதும் வழக்கம் இல்லாமல் போய்விட்டது.
சங்கு ஊத தெம்பு இல்லை!
கோவில்களிலும் சங்கு ஊதுகின்றனர். சங்கு ஊதுவது சுப சகுனமாகவே பார்க்கப்படுகிறது. சங்கு ஊதுவதால், உடலுக்கு ஏழுவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. “தினமும் இரண்டு நிமிடம் சங்கு ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்.” என்று இந்திய அறிவியல் மாநாட்டிலேயே பேசினார்கள். ஆனாலும், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களால், பலரும் உடலைக் கெடுத்து வைத்திருக்கின்றனர். அதனால், முன்னோர்கள் அளவுக்கு சங்கு ஊதும் ஆரோக்கியம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லை. சாவு வீடுகளில் சங்கு ஊத வற்புறுத்தும்போது, கட்டாயத்தின் பேரில் ஊதி, மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் உயிரை விட நேரிடுகிறது.
மாறிவரும் நடைமுறை!
“மருத்துவ சமுதாயத்தினர் என்னென்ன செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?” என்று அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உடைந்த குரலில் பேசினார். “பூப்பு எய்தும் சடங்கு, சாவு போன்றவற்றை ஊர் மக்களிடம் போய்ச் சொல்ல வேண்டும். பூப்பெய்திய பெண்ணைக் குளிப்பாட்ட வேண்டும். மகப்பேறு சமயங்களில் பெண்களுக்கு உதவ வேண்டும். எல்லாவற்றையும்விட கொடுமையானது மாப்பிள்ளைச் சவரம் என்ற வழக்கம். திருமணத்துக்கு முதல்நாள், மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்க வேண்டும். அப்போது, மணமகனுக்கு ஆண்மை தொடர்புள்ள நோய் எதுவும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து பெண் வீட்டாரிடம் சொல்ல வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல் என்ற பழக்கமும் இருந்து வந்தது. எங்களை இழிவுபடுத்திய பழைய நடைமுறை பலவும் இப்போது இல்லை.” என்று பெருமூச்சு விட்டார்.
ஆணோ, பெண்ணோ, தன் உடலைத் தொட அனுமதிப்பது டாக்டரையும், சவரத் தொழிலாளியையும்தான். இச்சேவை இரண்டையும் ஒருகாலத்தில் மருத்துவ சமுதாயத்தினரே செய்து வந்தனர். நோயிலிருந்து நம் முன்னோர்களைக் காத்த அச்சமுதாய மக்களை, மரியாதையுடன் அணுகுவதே, நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.