தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம்; பாஜகவின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை; அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்; செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நமக்கு அளித்த பேட்டி.
‘என் மண் என் மக்கள்’ என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தைத் தொடங்கப் போகிறாரே?
பா.ஜ.க. இல்லாத இந்த இடத்தில் அந்த நடைப்பயணம் நடக்காது. இந்த 9 ஆண்டுகளில் இந்தியாவினுடைய கோபுர பெருமையை குட்டிச் சுவராக ஆக்கியதைத் தவிர பா.ஜ.க கட்சி என்ன சாதனை செய்தது. ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று கூறிவிட்டு ரூ. 2000 நோட்டு கொண்டு வந்தது தவிர என்ன சாதனை செய்தார்கள். கழிப்பறை கட்டி இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அந்த கழிவறையை இவர்கள் பயன்படுத்தினால் தான் தெரியும்.
விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6000 கொடுத்தது மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பயனடைந்திருக்கிறார்களே? அதேபோல் வீடு கட்டும் திட்டத்திலும் நிறைய பேர் பயனடைந்திருக்கிறார்களே?
2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக ஆக்குவேன் என்று சொன்னார்கள். அப்படி பார்த்தால் விவசாயிகளுக்கு ரூ. 60,000 கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லையே. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விவசாயிகள் விரும்புகிற விலைக்கு விற்பதற்கு இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா. விவசாயம் செய்வதை விட வேறு எங்காவது சென்று இறந்து விடலாம் என்று கருதக்கூடிய விவசாயிகளின் கவலைக்கு மருந்து இட்டார்களா. விவசாயிகள் போராடுவதற்கு டெல்லிக்கு வந்தால் சாலையில் ஆணி அடித்து அவர்களை நிறுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு ஏதாவது செய்தார்களா. அதனால், விவசாயிகளுக்கு நல்லது செய்தோம் என்று சொல்வதெல்லாம் தவறான விஷயம். அதனால் மோடியினுடைய ஆட்சியில் சாதனை ஒன்றும் இல்லை. வேதனையிலும், துன்பத்திலும் மக்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள். வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களே முடிவு செய்து விட்டார்கள்.
மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என்று சொல்கிறார்கள்?
பிரதமராகுவதற்கு அமித்ஷா, யோகி, நிதின் கட்கரி போன்றவர்களுக்கு ஆசை இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியாது.
மோடி தலைமையில் 9 ஆண்டுக் கால ஆட்சியில் மோடி மீதோ பா.ஜ.க அமைச்சர்களின் மீதோ ஊழல் குற்றச்சாட்டு இதுவரை இல்லை. ஆனால், தி.மு.க.வில் இருக்கிறது என்று சொல்கிறார்களே?
ரூ. 21,000 கோடி அதானி கணக்கில் வந்தது எப்படி. அதேபோல் பிரதமர் பராமரிப்பு நிதி எங்கே இருந்து வருகிறது. ரஃபேல் விமானம் வாங்குவதில் எத்தனை கோடி ஊழல் செய்தார்கள். இதை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரூபிக்க முடியும். நிரூபிக்க வேண்டிய நேரம் கூடிய விரைவில் வரும். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை என இவை அனைத்தும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் அவர்கள் நினைத்ததை செய்து கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி விவகாரத்தில் இரண்டு மாதத்தில் புலன் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. ஆனால், அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்யவில்லையே. ஒருவருக்கு மாரடைப்பு வரும் அளவிற்கா புலன் விசாரணை செய்வார்கள். 17 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர் வீட்டில் 5 முறை ரெய்டு நடத்தியும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன கோபம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன. தி.மு.க.வில் அவர் பலமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மேலும், கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வை நிலை நிறுத்தியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கணக்கை தொடங்க முடியாத தி.மு.க.விற்கு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார். ஒரே பொதுக் கூட்டத்தில் 94,000 பேரை தி.மு.க.வில் சேர்த்துவிட்டார். இரண்டு வருட ஆட்சியில் அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்திருக்கிறார். பத்தாயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்திருக்கிறார். கண் விழிக்காத கிராமங்களிலும் கருப்பு சிவப்பு கொடியை பறக்கவிட்டார். கொங்கு மண்டலம் தான் அவர்களுடைய ஆதாரம் என்று சொன்னதை இன்றைக்கு அனைத்து இடத்திலும் தி.மு.க.வை நிலை நிறுத்தியிருக்கிறார். அதனால், செந்தில் பாலாஜியை அடித்தால் ஸ்டாலின் தாங்கிக் கொள்ளமாட்டார் என்ற நோக்கத்தில் இதுபோன்று செய்கிறார்கள்.
ஆனால், தேசிய அளவில் பேசப்படுகிற தலைவராக ஸ்டாலின் இன்றைக்கு மாறி இருக்கிறார். கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தெரிந்த செந்தில் பாலாஜியை பற்றி இன்றைக்கு மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார். செந்தில் பாலாஜிக்காக மராட்டிய மண்ணிலிருந்து சரத் பவார் பேசுகிறார். ஆகவே, தேசிய அளவில் செந்தில் பாலாஜி இன்றைக்கு புகழ் பெற்றிருக்கிறார். இது செந்தில் பாலாஜிக்கு வரமாக கிடைத்திருப்பதாக கருதுவாரே தவிர இது சங்கடம் என்று சொல்லி நலிந்து போகிற அளவிற்கு செந்தில் பாலாஜி அப்படி ஒன்றும் மோசமானவர் கிடையாது.