Skip to main content

யு.கே. டு யு.ஏ.ஈ. (UK டு UAE): சோதனைகளைக் கடக்குமா இந்திய கிரிக்கெட் அணி?

Published on 17/09/2018 | Edited on 17/09/2018

 

Asia cup

 

“வீட்டுல புலி வெளியில எலி” என்று சொல்வதைப் போல பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் சொந்த மைதானத்தில் வெளுத்துக்கட்டும். ஆனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மண்ணைக் கவ்விகொண்டு திரும்பி வரும். இதற்கு இந்திய அணியும் விதிவிலக்கு இல்லை. பல கால கட்டங்களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் மெச்சும்படியாக இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மோசமாகவே இருந்துள்ளது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

 

இங்கிலாந்தில் நடைபெற்ற  டி20 தொடரை 2-1 என இந்தியாவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தும் வென்றன. இரண்டரை மாத இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, 6 அணிகள் பங்கு பெறும்  ஆசிய கோப்பை போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ளது இந்திய அணி. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, குல்தீப் யாதவ் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும், கிங் கோலி இல்லாமல் இந்தத் தொடரில் பங்கு பெறுவது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Asia cup

 

இந்தியாவின் டாப்-3 ஆட்டக்காரர்களான ரோஹித், தவான் மற்றும் கோலி ஆகியோரின் செயல்பாடு சமீப காலமாக மிகவும் சிறப்பாக உள்ளது. இது மிகப்பெரும் பலமாக இருந்து வருகிறது. ஆனால் இதுவே இந்தியாவிற்கு மிகப்பெரிய பலவீனமாகவும் உள்ளது. ஏனென்றால் டாப்-3 வீரர்கள் சரியாக விளையாடாத ஒரு சில போட்டிகளில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. கோலி இல்லாமல் களம் காணுவதால், பேட்டிங்கை பொறுத்தவரை சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

 

முதல் விக்கெட்டிற்க்கு லோகேஷ்  ராகுலும், இரண்டாவது விக்கெட்டிற்க்கு எம்.எஸ்.தோனியும் களம் காண வாய்ப்புகள் அதிகம். மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய நால்வரில் இருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பெரிய சோதனையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே. பல போட்டிகளில் டாப்-3 பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்த போதிலும், சொதப்பலான மிடில் ஆர்டர் பேட்டிங்கால் தோல்விகளை தழுவியது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரிலும் இதே நிலைதான்.

 

அணியின் ஒரே ஒரு ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா, பேட்டிங் அல்லது பெளலிங் என ஏதாவது ஒரு துறையில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இணை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இங்கிலாந்து தொடரிலும் சுழல் பந்துவீச்சு மெச்சும்படியாக இருந்தது. புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு உள்நாடு, வெளிநாடு என அனைத்து நாடுகளிலும் சிறப்பாக இருந்து வருகிறது. காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாத பும்ராஹ், அணிக்கு திரும்பியிருப்பது வேகப்பந்துவீச்சுத் துறைக்கு கூடுதல் பலமாக இருக்கும். எனினும் ரெகுலரான ஆறாவது பந்து வீச்சாளர் இல்லாதது குறிப்பிடத்தக்கது. கேதர் ஜாதவ் பார்ட் டைம் பௌலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Asia cup

 

பலம்:

துவக்க ஆட்ட இணை

மிரட்டலான சுழல் பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

 

பலவீனம்:

வலுவில்லாத இடைநிலை ஆட்டக்காரர்கள்

ஆல் ரவுண்டர்கள்

 

உத்தேச அணி:

டாப் ஆர்டர்(1-3): ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்

 

மிடில் ஆர்டர்(4-7): எம்.எஸ்.தோனி, மனிஷ் பாண்டே அல்லது அம்பதி ராயுடு,   கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா

 

பவுலர்ஸ்(8-11): புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவெந்திர சஹால், ஜாஸ்ப்ரிட் பும்ராஹ்