ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ட்ரம்ப்பின் யூ ட்யூப் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் 07/01/2021 அன்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து வன்முறை தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. மீண்டும் வன்முறை தொடர்பான வீடியோவை அவர் வெளியிட வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், வன்முறை தொடர்பாக கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கியது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், ட்ரம்ப் தனது யூ ட்யூப் பக்கத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கியுள்ள அந்நிறுவனம், ட்ரம்ப் கணக்கையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.