கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில், ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பிராந்தியத்தில் மேலும் பதட்டம் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல சீனா, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் பெர்ஷியா மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களை எச்சரித்துள்ளன.