ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலால் இந்த பதட்டம் அதிகமானது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். இதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் ஆகியோரும் அடங்குவர். இதன் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் தங்களது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட துவங்கியுள்ளனர். போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும், போலீசாரும் கடுமையாக போராடி வரும் நிலையில், போராட்டத்தை அடக்க மக்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "ஈரான் மீது பொருளாதார தடை விதித்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்துவோம் என எங்கள் தேசிய ஆலோசகர் தெரிவித்தார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது முற்றிலும் அவர்களின் முடிவு சார்ந்த விஷயம். ஆனால் இதற்கு அணு ஆயுதங்கள் தேவைப்படாது. உங்களுக்கு எதிராக போராடும் சொந்த நாட்டு போராட்டக்காரர்களை கொல்ல வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.