
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலைக்கு பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதேநேரம் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேலிட பொறுப்பாளர்களிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் அவர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தற்போதைய தலைவர் ஆனந்தன் நீக்கி இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சி பதவிகளில் இனி செயல்பட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் இனி செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்பம் மட்டும் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ விசாரணையில் கவனம் செலுத்துவதற்காக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.