![“Tamil is a premier state” - Governor RN Ravi praises](http://image.nakkheeran.in/cdn/farfuture/yCWuzQQX9EFn0IoEzkj6BwNB8jUsr6OkCqRQ_7icZgM/1669787919/sites/default/files/inline-images/491_4.jpg)
சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடந்தது. இவ்விழாவில் ஆளுநர், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆளுநர் பேசும் போது, “தற்போது இருக்கும் நிலையில், புத்தகப் படிப்பு மட்டும் போதாது. திறன் சார்ந்த அறிவும் அவசியம். இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்கும். போட்டி நிறைந்த உலகில் வளர்ச்சி என்பது எளிதானது அல்ல. கடுமையாக முயன்றால்தான் முன்னேறிப்போக முடியும்.
பல்வேறு துறைகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. திருக்குறளை மொழிபெயர்த்து பிற மாநிலங்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி இதற்காகத்தான் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை காசி தமிழ் சங்கத்தில் வெளியிட்டார்.
தமிழ்மொழியை வடகிழக்கு மாநிலங்களின் பாடத்திட்டத்தில் 2-வது மொழியாக இணைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் நான் வலியுறுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.
அமைச்சர் பொன்முடி பேசும்போது, “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கான பட்டமளிப்பு விழா அரங்கம் விரைவில் அமைக்கப்படும். ஆரம்பக் கல்வியாக இருந்தாலும் உயர்கல்வியாக இருந்தாலும், அதை மேம்படுத்தவும் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கவும் முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதனால் தமிழகம் கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது” என்றார்.