தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியையும் கொந்தளிப்பையும் உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த “கால அவகாசம்” கேட்கும் மனுவை திரும்பப் பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தற்கொலை செய்த பிரவுக்கும், தீக்குளித்த ரவிக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி இழுத்தடித்துக்கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக தோழர் பிரபு மற்றும் மக்கள் விரோத நியூட்ரினோ திட்டத்தைப் புகுத்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து இறந்த ம.தி.மு.க. தோழர் ரவிக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக உரிமைகளைக் காப்பாற்றவும், மீட்டு எடுக்கவும் அறவழியில் போராட்டம் நடத்திட வேண்டும் எனவும் இது போன்ற உயிர்த் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது என இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து முழு அடைப்புக்கு ஒத்துழைத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்து தமிழ்நாட்டு உரிமைகளை அப்பட்டமாக அத்துமீறி ஆக்கிரமித்து நசுக்கிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அதற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க மனமில்லாமல் மவுனமாகத் துணை போகும் அதிமுக அரசைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அமைதியான அறவழிப் போராட்டத்தை அனைத்து தரப்புத் தமிழ் மக்களும் வெற்றிகரமாக நடத்தியிருக்கும் மிகமுக்கியமான நிகழ்வை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது. 1.4.2018 முதல் நடைபெற்ற தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை மீட்கும் அறவழிப் போராட்டங்கள் ஒரு சிறிய வன்முறைக்குக் கூட இடமளித்து விடாமல் மிகவும் அமைதியாக நடைபெற்றிருப்பதிலிருந்தே தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமான இந்த போராட்டங்களை கட்டுப்பாட்டோடு எவ்வளவு உயரிய ஜனநாயகப் பாதையில் வழி நடத்தியிருக்கின்றன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அமைந்திருப்பதை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரவேற்கிறது.
இதைத் தொடர்ந்து 5.4.2018 (நேற்று) நடைபெற்றுள்ள முழு அடைப்பில் அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், காவிரி உரிமையை மீட்டு எடுக்கும் ஒரே நோக்கத்துடன் ஓரணியில் நின்று முழு அடைப்புப் போராட்டம் அமோக வெற்றி பெற ஆதரவளித்துள்ளனர் என்பது ஒட்டு மொத்த தமிழகமும் மாமலைபோல் உறுதியுடன் திரண்டு எழுச்சியுடன் நிற்கிறது என்ற உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் அறிவித்த ஜனநாயக ரீதியிலான மறியல் போராட்டங்களையும், முழு அடைப்பையும் வெற்றிகரமாகவும், அறவழியிலும் நடத்திக் கொடுத்துள்ள தமிழக மக்களுக்கு இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியையும் கொந்தளிப்பையும் உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த “கால அவகாசம்” கேட்கும் மனுவை திரும்பப் பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.