புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே , ஆட்சியர் அலுவலகம் அருகே என ஒரே நாளில் 3 சம்பவங்களில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
![attack](http://image.nakkheeran.in/cdn/farfuture/xc1y33mgiWdlt14LTVe7__pU_DV2Sm2wwwuwK7zR1A8/1536176490/sites/default/files/inline-images/7eee5eec-90ba-4b84-999a-8f0fe2fa2bcd.jpg)
சம்பவம் - 1
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள புங்கினிபட்டியை சேர்ந்த தர்மேந்திரன், கன்ணையா, சித்திரைவேலு, ஆறுமுகம் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த கேசவன், மணிகண்டன், பாலசுப்பிரமணி தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தர்மேந்திரன் தரப்பினர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரை அடுத்து இலுப்பூர் காவல் துறையினர் விசாரணைக்காக பொன்னையா, கேசவன், மாணிக்கம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை நேற்று இலுப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
![attack](http://image.nakkheeran.in/cdn/farfuture/4FwDH-Kck1aDITflFkmq39twBblvdcROHX895N1uuCE/1536176520/sites/default/files/inline-images/79683bbb-daac-407f-bd2d-9d991dd0ea45.jpg)
இந்நிலையில் இலுப்பூர் காவல் நிலையத்திற்கு சென்ற கன்னையா, சித்திரைவேலு, தர்மேந்திரன், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேர் காவல் நிலையம் அருகே விசாரணைக்காக காத்திருந்த பொன்னையா, கேசவன், மாணிக்கம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை மறைத்து வைத்திருந்த கத்தி , இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் கேசவன், மணிகண்டன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். காவல் நிலையம் அருகே விசாரணைக்காக அழைத்துவரப்பட நபர்களை ஆயுதங்களை வைத்து தாக்கிவிட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவல் நிலைய வாசலில் நடந்த சம்பவத்திற்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் - 2
இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவப்பூர் காட்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த பைனான்சியர் வெள்ளைச்சாமி என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் ஒட ஒட விரட்டி வெட்டபட்டார். இதில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்கா திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் 3
இந்த நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த வெங்கடேஷ் என்பரை அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் அருகில் ஒரே நாளில் 3 சம்பவங்களில் 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.