சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவோர், வரும் புதன்கிழமை (ஜூன் 15) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தி.மு.க.வின் 15- வது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதையடுத்து, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, இடைப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் மேற்கு ஆகிய ஒன்றியங்களில் கழக நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் புதன்கிழமை (ஜூன் 15) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ஸ்ரீநடராஜன் மஹால் மண்டபத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை பெற்று, முறைப்படி பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன் தலைமைக்கழக பிரதிநிதி வழக்கறிஞர் அருள்தாசனிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒன்றிய கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர் 3 பேர், மாவட்ட பிரதிநிதிகளாக 3 பேர், இவர்களைத் தவிர 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாங்கள் உறுப்பினராக உள்ள ஒன்றியங்களில் மேற்கண்ட பொறுப்புகளுக்கு போட்டியிடலாம். வேட்பாளர்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்கழகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச்செயலாளராகவோ, ஒன்றிய பிரதிநிதியாகவோ இருத்தல் வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடுவோர் அந்தந்த ஒன்றியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும்." இவ்வாறு டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார்.