Skip to main content

‘பா.ஜ.க.-வின் வரம்பு மீறிய நடவடிக்கைகளும் சலுகைகளும்’ - டெல்லி தேர்தல் களத்தை விவரித்த பால்கி

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
 Balki describes the Delhi Assembly election

முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி, அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் டெல்லியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கள நிலவரைத்தைப் பற்றி தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய தேர்தல் கமிஷனின் விருப்பப்படி டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, தேர்தலின்போது தேர்தல் கமிஷன் எப்படி செயல்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். தேர்தல் கமிஷன் மீது எதிர்க்கட்சிகள் மொத்தமாக பத்து வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் டெல்லி சட்டமன்ற தேர்தல் வந்திருக்கிறது என்ற பார்வையில்தான் நினைக்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு அங்கு பெரிய மழை பெய்தது. அந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு சென்று சில திட்டங்களை அறிவித்த பிறகுதான் மகாராஷ்டிரா தேர்தல் வந்தது. அதாவது களத்தை முதலில் பா.ஜ.க. தயார் பண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் உதவி செய்யும், அறிவிப்புகள் தொடரும். இதேதான் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பிலும் நடந்துள்ளது.

அண்மையில் ரூ.27,200 கோடிக்கு மேல் டெல்லியில் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் பற்றி மிக மோசமாக மோடி பேசினார். ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பதிலாக வந்திருக்கும் அம்மாநில முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய முதலமைச்சருமான அதிஷியின் குடும்ப பின்புலத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் தரைகுறைவாக பேசினார்கள். அதோடு மட்டுமில்லாமல் ஆம் ஆத்மி கட்சியினர் மீது அமலாக்கத்துறை வைத்து சோதனை நடத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டு அமைச்சர்களை மட்டும் பா.ஜ.க.வினரால் விலைக்கு வாங்க முடிந்தது. அதே போல் வெவ்வேறு கட்சிகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு வரவிருப்பவர்களையும் தடுத்து நிறுத்தினார்கள். இது பா.ஜ.க. நிர்வாக ரீதியாக ஆம் ஆத்மி கட்சிக்கு விடுத்த மிரட்டல் நடவடிக்கை.

மேற்கூறப்பட்ட வரம்பு மீறிய நடவடிக்கைகளைச் செய்ததோடு மட்டுமில்லாமல் வரம்பு மீறிய சலுகை திட்டங்களையும் அறிவித்திருக்கின்றனர். இந்த சூழலில்தான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அதைக் கொண்டாட அனைவருக்கும் இன்விடேஷன் அனுப்பினார். ஆனால் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்ன மோடிக்கு அவர் இன்விடேஷன் தரவில்லை. அதை வாங்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போனார். இதை சில பத்திரிக்கைகள் டொனால்டு டிரம்ப் வீட்டின் வாசலில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிற்கிறதாகவும் டொனால்டு டிரம்ப் வெளியில் அந்த இன்விடேஷனை போட்டால் அதை ஜெய்சங்கர் எடுத்து இந்தியா கொண்டு வருவதாகவும் எழுதியிருந்தனர். இது எவ்வளவு பெரிய அசிங்கம் என்பதை அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் ஒரு பார்ட்டி வைத்தார் அந்த பார்ட்டியில் பைடனுக்கு மோடி ஒரு மோதிரம் கொடுத்ததோடு இல்லாமல் அவரது மனைவிக்கு ரூ.25 லட்சத்தில் மோதிரம் கொடுத்துள்ளார்.

வாசலில் வெளியுறவுத்துறை அமைச்சர் நின்றது, மோதிரம் கொடுத்ததை ஏன் ஞாபகப்படுத்துகிறேன் என்றால் டெல்லியில் உள்ள ஸ்லம் கிளியரன்ஸ்க்கு கடந்த பட்ஜெட்டின்போது ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்டுப்பாட்டில் நிர்வாகம் இல்லை என்பதைக் காட்டும் முயற்சியில் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது. நடக்கவிருக்கும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே போல் மற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள். பா.ஜ.க.-வை கடுமையாக எதிர்க்க வேண்டியது காங்கிரஸ்தான். ஆனால், பிரியங்கா காந்தி கன்னத்தை கிண்டல் செய்து ஒரு பா.ஜ.க. வேட்பாளர் பேசி இருக்கிறார் காங்கிரஸ் எதிர்ப்பு நடவடிக்கை செய்யாமல் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பொதுமக்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள்? தமிழ்நாட்டில் ஆளுநரின் அத்துமீறிய செயலை ஆளும் திராவிட கட்சி உடனடியாக ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். அதுபோல காங்கிரஸும் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் அப்பீல் வெளியிட்டுள்ளனர். டெல்லி தேர்தலின்போது எதிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டிய பொறுப்பும் டெல்லி நடவடிக்கைகளை திட்டமிட்டு காலி பண்ணும் பா.ஜ.க.-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய தேவையும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்றார்.