பாலஸ்தீனம் - லெபனான் - சிரியா - ஈரான் - இஸ்ரேல். இந்த 5 நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தொடங்கிய போர், இன்றும் அதன் கோர முகத்தை காட்டியே வருகிறது. இந்த 2024 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு தனது நாட்களை எப்படி கடந்தது என்பதையே இந்த கட்டுரை விளக்குகிறது.
மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலில், இதுவரை 17,490க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 45,400க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,08,090க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களும் அடங்குவர். கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதலாகவே இஸ்ரேல் இந்த போரை அடையாளப்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் திட்டமிட்டு இனப்படுகொலையை அரங்கேற்றி வருவதாக கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்த போர் தொடங்கிய நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களால் ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஹமாஸ் மூத்த தலைவர்களான இஸ்மாயில் ஹனியா மற்றும் யாஹ்யா சின்வார், ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்த போது இஸ்மாயில் ஹனியா 2024 ஜூலை 31ம் தேதி ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2024 அக்டோபர் 16ம் தேதி, யாஹ்யா சின்வார் உள்ளிட்ட ஹமாஸ் அமைப்பின் மூன்று மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 செப்டம்பர் 2024 அன்று ஹசன் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் - ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பகை இந்த மரணங்களால் பெரும் மோதலாக வெடித்திருக்கிறது.
இந்த மரணங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நேரடியாகவே நடத்தியிருந்தது. குறிப்பாக ஹசன் நஸ்ரல்லா மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாக நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அக்டோபர் 2, 2024 அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏவியிருந்தது. "தங்கள் அமைப்பின் உயர் தளபதி மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி இது" என்று இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணம் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஹனியாவின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது. "ஈரான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது, அதற்கு அந்த நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களில் இருந்த ராணுவ நிலைகள் மீது அக்டோபர் 26 2024 அன்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
காசா - பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்த ஹெஸ்புல்லா, ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட அதன் தலைவர்கள் பலரை இழந்து, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை (நவம்பர் 27 2024) ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்ததே இந்த போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக அமைந்தது. எனினும் அந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் 300 முறைக்கும் அதிகமாக இதுவரை மீறியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக ஏமன் நாட்டின் கிளர்ச்சிக் குழுவான ஹூதி கிளர்ச்சிக் குழு, இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் இதற்கு எதிர்வினையாற்றி வருகிறது. ஈரான் ஆதரவு குழுவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு செங்கடலில் அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. "விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும்" என ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர காற்றை சுவாசிக்கும் சிரியா?
சிரியாவை கடந்த 53 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பஷர் அல் அசத் குடும்பம் பெரும் சரிவை சந்தித்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழு சிரியாவை கைப்பற்றியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் அந்நாட்டு மக்களிடையே எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகமாக காணப்படுகிறது. இரும்புக்கரம் கொண்டு நடத்தப்பட்ட அசத் குடும்ப ஆட்சியில், சிரியா மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அசத் ஆட்சியில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழுவை ஐ.நா., அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதுகின்றன. எனினும், சிரியா பிரதமர் முகமது அல்-ஜலாலி, "சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்" என்று அறிவித்துள்ளார். சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர்.
காசாவில் எப்போது நிகழும் போர் நிறுத்தம்?
ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக இஸ்ரேல் நடத்தி தாக்குதலில், குழந்தைகளும் - பொதுமக்களும் உயிரிழந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காசாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில், இந்தப் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்பப்பட்டது. அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் "பாலஸ்தீனத்தை தனி நாடாக மாற்றுவதே இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வாக அமையும்" என கமலா ஹாரிஸ் பேசியது வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது. ஆனால், தேர்தல் முடிவில் டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார். "நான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் தேதிக்கு முன்பு பணையக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும்" என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை சர்வதேச நீதிமன்றமும், ஐ.நா.வும், பல்வேறு உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு பணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும். பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே சர்வதேச நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பு. காசாவில் மருத்துவ பணியாளர்கள் மீதும், பத்திரிகைளார்கள் - ஊடகவியலாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தி, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அத்தனையையும் இழந்த பாலஸ்தீன மக்களுக்கு அமைதியை ஏற்படுத்த உலகின் ஜனநாயக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே உலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.