2024ஆம் ஆண்டு உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய ஆண்டாக அமைந்து என்றால் மிகையாகாது. அந்த வகையில் ஆட்சி மாற்றம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தல், போர் பதற்றம், போர்ச் சூழல் என உலக அரங்கில் சற்று பதற்றமான ஆண்டாகவே இந்த ஆண்டு அமைந்தது. இந்த ஆண்டில் உலக அளவில் பேசப்பட்ட, கவனம் பெற்ற சில நிகழ்வுகளை இந்த தொகுப்பில் காணலாம்.....
உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த பிரான்ஸ்:
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பினை மகளிரின் அடிப்படை உரிமையாக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கடந்த 1975ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கருகலைப்பை மகளிரின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருகலைப்பை மகளிரின் அடிப்படை உரிமையாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றது. கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும். அதே சமயம் கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25வது திருத்தமும் இதுவாகும். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு பிரான்ஸ் மட்டுமல்லாது உலக அளவில் வரவேற்பு கிடைத்திருந்தது.
கன்னி பேச்சிலேயே கவனம் ஈர்த்த நியூசிலாந்து பெண் எம்.பி. :
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் உறுப்பினராக இருப்பவர் ஹனா (வயது 22). இவர் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். நாடாளுமன்றத்தில் பேசிய தனது கன்னிப் பேச்சின் போதே மாவோரி மொழியில் பேசியது அந்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் நியூசிலாந்து இருந்தபோது ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் அங்குள்ள பூர்வக்குடிகளான மவோரி இன தலைவர்களுக்கும் இடையே வைதாங்கி என்ற ஒப்பந்தம் (Waitangi Treaty கடந்த 1840ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி மாவோரி பழங்குடியினர் தங்கள் நிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை வழங்காமல் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன. அதோடு மவோரி பழங்குடியினத்தவரின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள், நீதிமன்றங்கள் மற்றும் சிறப்புத் தீர்ப்பாயங்கள் மூலம் தீர்க்கப்பட்டு வந்தன.
இருப்பினும் மவோரி மக்கள் நலன்கள் மீதான முடிவுகளை இனி நாடாளுமன்றம் எடுக்கும் வகையில் வைதாங்கி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, ஹானா மசோதா நகலை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களின் புருவத்தை உயர்த்த செய்தது. அவருடன் பிற மபோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும், பார்வையாளர்களாக அங்கிருந்த மவோரி இன மக்களும் இணைந்து மசோதாவுக்கு எதிராக தங்களின் போர் முழுக்கதை எழுப்பினர். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக நியூசிலாந்தின் பாராளுமன்றத்திற்கு வெளியே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3வது முறையாக அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்ட ரஷ்ய அதிபர்:
உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. இதற்கிடையே ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் களம் கண்டன. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்ற விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக வெற்றி பெற்றார். இதன் மூலம் விளாடிமிர் புதின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றார். ரஷ்ய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்றார். புதின் கடந்த 1999ஆம் ஆண்டில் செயல் அதிபராக பதவியேற்ற அவர் 2000ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தற்போது வரை அதிபராக நீடிக்கிறார்.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த ஆய்வு திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக இருவரும் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவர்களை அழைத்து வர நாசா, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. ஆனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து, மேலும் அவர்கள் பூமிக்குத் திரும்ப ஒரு மாத காலம் ஆகலாம் என நாசா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா:
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதனையும் மீறி டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 1971ஆம் ஆண்டில் நடந்த வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. வங்கதேசம் முழுவதும் கலவரம் பரவியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இத்தகைய சூழலில் தான் போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைந்தனர். அதே சமயம் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதே சமயம் ஷேக் ஹசீனாவிற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்துக் கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இதற்கிடையே வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அப்பதவியில் இருந்து விலகியதால், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான வாண்டர்பில்ட் பல்கலைகழத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.
உலக அளவில் கவனம் ஈர்த்த அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்காவின் 46வது அதிபராகக் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம், அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் எனப் பரபரப்புக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். அந்த வகையில் மொத்தம் உள்ள 538 தொகுதிகளில் குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 277 தொகுதிகளிலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாஹாரிஸ் 224 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அதன்படி சுமார் 51 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
முன்னதாக ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாகத் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், “எனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.இருப்பினும் தனது மகனான ஹண்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவருக்கு ஹண்டர் பைடன் சிறை செல்லமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அவரது காதில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தம் சொட்டச் சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உலக முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் நலனில் அக்கறை காட்டிய ஆஸ்திரேலியா:
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிகப்படியான சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் சமூகத்திற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அரசு சமீபத்தில் அதிரடி முடிவு ஒன்று எடுத்திருந்தது. அதன்படி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குப்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் கூறியிருந்தார். அந்த வகையில் 16 வயதுக்குப்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை செய்யும் வகையில் இணையக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை அனுமதிக்கும் எக்ஸ், டிக் டாக், பேஸ்புக், ஸ்நாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு 150 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்கள் (32 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதிக்கவுள்ளதாக வலியுறுத்தப்பட்டது. இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடைபெற்று வெற்றி கரமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவனம் பெற்றுள்ளது. இந்த மசோதாவிற்கு வரவேற்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் மூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம் கண்ட இலங்கை அரசு:
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதே சமயம் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிபராக இருந்த ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக்க, அநுரா குமார திஸநாயக, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக அதிபராகப் பதவியேற்றார்.
இத்தகைய சூலில் தான் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேரில், 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இலங்கை மக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் மீதமுள்ள 29 பேர், நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப வாக்கு அடிப்படையில், வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் அநுர குமார திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் புதிய சாதனை படைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராகக் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். வெளி விவகாரத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுக்கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 13 எம்.பி.க்கள் உட்பட 28 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.
அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களை சந்தித்த தென் கொரியா:
தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் கடந்த 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசர நிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். நாட்டின் நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு அதிபர், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். இருப்பினும் அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார். இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பியது. அதே சமயம் திடீரென்று, ராணுவ நிலை அவசர சட்டம் அமல்படுத்தியதற்குத் தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஆளுங்கட்சி உள்பட 204 உறுப்பினர்கள், அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், பெரும்பான்மை கிடைத்த பட்சத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் யூன் சுக் யீயோல், பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திடீர் அவசரநிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் தென்கொரியா நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். 300 உறுப்பினர்கள் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில், 192 பேர் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்படி, இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, தென் கொரியாவின் இடைக்கால அதிபராக, துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான சோய் சாங்-மோக் நியமிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் முடிவுக்கு வந்த குடும்ப ஆட்சி:
சிரியா நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டின் போது, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இந்த உள்நாட்டுப்போர் தொடங்கியதிலிருந்தே, அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலால், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் சென்றது. கடந்த 2012ஆம் ஆண்டு இந்த போர் தீவிரமடைந்ததன் மூலமாக, சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக்கச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு ரஷ்யா, ஈரான் மற்றும் ஈரானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பு, ஹமாஸ் அமைப்பு ஆகிய அமைப்புகள் முன்னாள் அதிபர் பஷார் அல்-ஆசாத் அரசுக்கு ஆதரவு அளித்ததால், அங்கு அரசின் ஆட்சியை நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக மோதல் ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஹெச்டிஎஸ் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து முன்னேறி வந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். இவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக ரஷ்யாவும், சிரியாவும் வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தாலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறி மற்ற பெரிய நகரமான ஹமா பகுதியையும் கைப்பற்றினர். அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர் படையினர், தொடர்ந்து முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றினர். நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வந்த சூழ்நிலையில் அந்நாட்டு முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் இருந்து தப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையில், சிரியா அரசை கிளர்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகமது காஜி ஜலாலி தெரிவித்திருந்தார். இதன் மூலம், பஷாரின் 50 ஆண்டுக் கால குடும்ப ஆட்சி அங்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சிரியாவில் தப்பித்த அந்நாட்டு முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு சிறை தண்டனை:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களைக் கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான்கானிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
பரிசுப் பொருட்களைக் கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, அரசு பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை மீதான விசாரணையில் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே சமயம் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, ராவல்பிண்டி போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூடவுன் காவல் நிலையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில், இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளே அவர் கைது செய்யப்பட்டார்.
வரவிருக்கும் புத்தாண்டு (புது ஆண்டு) உலகம் முழுவதும் சமத்துவ, சகோதரத்துவம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்...