சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாக துபாயில் நேற்று(11.1.2025) முதல் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார். அண்மையில் பயிற்சி எடுத்த போது அவரது கார் விபத்துக்குள்ளனது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து போட்டியின் போது அவர் கொடுத்த பேட்டியில், நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை நடிக்க போவதில்லை என்றும் சினிமாவுக்கு வந்ததால் கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் அண்மையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அஜித்குமார் போட்டியின் போது முழுமையான ஓட்டுநராக செயல்படாமல், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்குமார் கார் ரேஸில் கலந்துகொள்வதை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் நேராக துபாய்க்கே சென்ற உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமார் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்.“நிறைய ரசிகர்கள் நேர்ல வந்திருந்தாங்க, அதை பார்க்கும் போது எமோசனலா இருக்கு. ஆனால், நான் உங்களுக்கு சொல்லிக்க விரும்புகிற விஷயம் ஒன்னே ஒன்னு மட்டும்தான், நீங்க எல்லோரும் சந்தோஷமா, ஆரோக்கியமா மன நிம்மதியோடு வாழனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறன். உங்களுடைய கும்பத்தை பாருங்க, நேரத்த வீணடிக்காதீர்கள்... நல்லா படிங்க, வேலைக்கு போறவங்க கடுமையாக உழைச்சு வேலைப்பாருங்க.
நமக்கு புடிச்ச விஷயத்துல கலந்துகிட்டு வெற்றியடைஞ்சா நல்ல விஷயம்தான். ஆனால், ஒருவேளை தோல்வியடைஞ்சா சோர்ந்து போயிடாதிங்க. இங்க, போட்டிப்போடுறது ரொம்ப முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பு இது இரண்டையும் விட்டுக்கொடுக்காதிங்க. எல்லோருக்கும் லவ் யூ...
Endurance ரேஸ் மத்த விளையாட்டு மாதிரி தனிநபர் விளையாட்டு கிடையாது; ஒரு அணியாக விளையாட வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொருவரின் செயல்பாடும் அணிக்கு முக்கியமானது. திரைத்துறை போலவே இதுவும்... அதனால எல்லோரும் அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தாலே போதும், நல்ல முடிவு தானாகவே வரும். ரசிகர்களே ப்ளீஸ் சண்டை போடாதீங்க. வாழ்க்கை ரொம்ப சின்னது. சந்தோஷமா இருங்க; உங்க குடும்பத்தை பாருங்க.... குடும்பத்தை பாருங்க....” எனத் தெரிவித்துள்ளார்.
Ak.
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025