நான்கு நாள் அரசுமுறை பயணமாக துபாய்க்கு சென்று விட்டு இன்று காலையில் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். சென்னைக்கு நள்ளிரவில் வந்த ஸ்டாலினை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர். ஏர்போர்ட்டில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டதும் அமைச்சர்களும் கிளம்பிச் சென்றனர்.
வீட்டிற்கு சென்ற துரைமுருகன் மீண்டும் இன்று காலையில் ஏர்போர்ட்டிற்கு வந்தார். தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல வந்திருந்தார். எமிரேட்ஸ் ஏர்வேஸில் அவருக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. துபாய் சென்று விட்டு, அங்கிருந்தபடியே ஏப்ரல் 2-ந்தேதி டெல்லிக்கு செல்லவும் துரைமுருகன் தரப்பில் முடிவு செய்திருந்தனர். விமான நிலையத்தில், துரைமுருகனின் பாஸ்போர்ட்டை பரிசோதித்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ‘’துபாய் செல்ல உங்களை அனுமதிக்க முடியாது ‘’ என்று சொல்லவும், அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் துரைமுருகன். 'ஏன் அனுமதிக்க முடியாது' என அதிகாரிகளிடம் அவர் கேட்க, ‘’ உங்கள் விசாவில் பாஸ்போர்ட் எண் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் அனுமதிக்க முடியாது ‘’ என விளக்கமளித்தனர்.
இதனால் எந்த பிரச்சனையும் செய்யாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார் துரைமுருகன். வீடு திரும்பிய நிலையிலும் அவருக்கு பதட்டம் குறையவில்லை. இதைக் கூட கவனிக்க மாட்டீர்களா? என தனது உதவியாளர்களிடம் குறைபட்டுக்கொண்டார். இந்த நிலையில், விசாவில் பாஸ்போர்ட் எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை திருத்தம் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சரி செய்யப்பட்டு விட்டால் இன்று மாலையே துரைமுருகன் துபாய் செல்வார் என திமுக தரப்பில் இருந்து தகவல்கள் கசிகின்றன.