Skip to main content

“ ‘ஸ்ரீரங்கம் தீபு பட்டர் மாடு வருதுப்பா..’ அந்த சந்தோசம் போதுங்க” – ஸ்ரீரங்கத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பட்டரின் கதை இது!

Published on 06/08/2021 | Edited on 07/08/2021

 

Srirangam Thippu jallikkattu Cow story

 

“ஏய் யப்பா மாட்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சைக்கிளு… மாடு சுத்துனா மேக்கொண்டு பரிசுப்பா… பிடிக்கிறவங்க புடிச்சிக்கங்க….”, “ஒரு வெள்ளிக்காசுப்பா…”, “போட்டி சூப்ரிம் கோர்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்குது. அந்த 31வது நம்பரும் 11வது நம்பரும் ரெட் கார்ட். ரெண்டு பேரையும் வெளியேத்துங்க…’’, “மாடு புடி.. மாடு பா”, “எப்பா மாட்டுக்காரன் வந்து பரிசா வாங்கிக்க…” என்ற வார்த்தை எல்லாம் கேட்கும்போதே உள்ளுக்குள் ஒரு உணர்வு பொங்கி வரும். 

 

ஆம், ஜல்லிக்கட்டுதான்! தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. “வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போக மாட்டோம்” என கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக ஒரு போராட்டத்தைக் களத்தில் நின்று இளம் காளையர்கள் நடத்தினார்கள் என்றால், அது தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்கவும், காளைகளுக்காகவும் நடத்தப்பட்ட உணர்வு பொங்கிய ஒரு போராட்டம்.

 

இந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட எத்தனையோ பேர் அதன்பிறகு களத்திற்கும், ஜல்லிக்கட்டு மீது ஆர்வமாகியும் காளை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படியே அந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு தற்போது 8 காளைகளையும், நாட்டு மாடுகளையும் வளர்த்துவரும் ஸ்ரீரங்கம் பட்டர் பற்றிய தொகுப்புதான் இது!

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தெற்கு உத்திர வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் என்கிற தீபு (32). ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பட்டராக இருந்துவருகிறார். இவர்தான் தன்னுடைய வீட்டில் காளைகளைப் பிள்ளையாக வளர்த்துவருபவர். எத்தனையோ விமர்சனங்களைக் கடந்தும் கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும், நாட்டு மாடுகளைக் காப்பதற்காகவும் அவர் களத்தில் இறங்கிய கதையும், காளை வளர்ப்பில் ஆர்வம் வந்தது குறித்தும் ஸ்ரீரங்கம் தீபுவிடம் பேசினோம், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சியில் பத்து நாட்கள் கலந்துகொண்டேன். அதன் பிறகுதான் எனக்குள்ளே மாறுதல் ஏற்பட்டது. எனக்கும் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி வளர்க்க வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்து தோன்றியது. 

 

அதன்பிறகு ஒரு நாட்டு மாடு வாங்கினோம். பிறகு படிப்படியாக தற்போது 8 ஜல்லிக்கட்டு காளைகள் எங்களிடம் உள்ளன. ‘என்ன ஒரு பிராமணன் போய் மாடு வளர்க்கிறாய்? ஐயர் போய் மாடு வளர்க்கிறாய்?’ என்று நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர். ஏன் ஐயர் மாடு வளர்க்கக் கூடாதா?… பாரம்பரியத்தை யார் வேண்டுமானாலும் காக்கலாம்.

 

எங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பால் நான் தற்போது மாடுகளைப் பராமரித்துவருகிறேன். என்னுடைய மாடுகள் நிறைய இடங்களில் சைக்கிள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், கட்டில் என அத்தனை பரிசுகளும் வாங்கியுள்ளன. அதில் எதையுமே நாங்கள் இதுவரை கொட்டகைக்கு எடுத்து வந்ததில்லை. இடையில் யார் கேட்கிறார்களோ அவரிடமே கொடுத்துவிடுவோம். தற்போது 8 காளைகள் இருக்கின்றன. இந்த 8 காளைகளை, 18 ஆகவும், 32 ஆகவும், இன்னும் அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசைதான் உள்ளது. 

 

Srirangam Thippu jallikkattu Cow story

 

ஒரே தட்டில் சாப்பிடுவது மட்டும்தான் நாங்க செய்யல; அதையும் இனிவரும் நாட்களில் நாங்க சாப்பிடுவோம். பெருசு, கருப்பு, மட்ட, பிகிலு என பேர் சொல்லித்தான் கூப்பிடுவோம். எங்க வீட்டில ஒரு புள்ளை மாதிரிதான் இந்தக் காளைகளை நாங்க வளர்த்துவர்றோம். 

 

காளை ஜல்லிக்கட்டு போயிட்டு வந்ததிற்கு அப்புறம், எங்க அம்மாதான் மாட்டுக்கு சூடம், கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுப்பார்கள். அப்பாவும் கோயில் பட்டராத்தான் இருக்காரு. அவரு அப்பப்போ மாடுகள் எப்படி இருக்கு, என்ன பண்ற, அப்படிங்கற மாதிரி அவருக்குமே ஒரு ஆர்வம் தற்போது வந்துவிட்டது. மாடுகளை நாங்க வளர்த்துவர்றோம். ஆனா, வெளியில ஜல்லிக்கட்டுக்குக் கூட்டிப்போறது எல்லாமே இந்த ஸ்ரீரங்கத்தில் ரஞ்சித் நினைவு குழு பசங்கதான். அவ்வளவு ஆர்வமாக மாட்டை வண்டியில் ஏற்றுவது முதல் வீட்டுல வந்து இறக்குவது வரை எல்லா வேலையும் பாப்பாங்க. 

 

இப்ப நடக்கிற ஜல்லிக்கட்டுக்குள்ள அரசியல் வந்துடுச்சு. அரசியல்வாதிகள், பணபலம் படைத்தவர்கள் மாட்டை மட்டும் முன்னாடி அனுப்புறாங்க. ஆனா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு டோக்கன் கிடைக்கிறதுல கூட அவ்வளவு கஷ்டமா இருக்கு. ‌‌இந்த மாடு புடிக்குறவங்களுக்கு இன்சூரன்ஸ் வசதி இல்ல. இந்தக் குறைகள் எல்லாம் தமிழக அரசு நிவர்த்தி பண்ணணும். எவ்வளவு தடைகள் இருந்தாலும் வாடிவாசல் வரும்போது ‘ஸ்ரீரங்கம் தீபு பட்டர் மாடு வருதுப்பா..’ அப்படின்னு சொல்லும்போது வர சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அந்த ஒரு சந்தோசம் போதும். நான் தொடர்ந்து மாடுகளை வளர்த்துவருவேன்” என்றார் புன்னகையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்