அரசு பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் முயற்சி மூடிமறைக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்த இந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவின்குமார் கூட்டாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் , ‘புதுச்சேரி பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போதை ஆசாமிகள் 3 பேர் பல்கலைக்கழகத்தில் சட்ட விரோதமாக சென்றது மட்டுமில்லாமல் அங்கு மாணவி ஒருவரிடம் கூட்டு பாலியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அப்போது, மாணவி சுதாரித்து சத்தம் போட அவரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் தவறான கொள்கையால் மாநிலத்தில் போதை கலாச்சாரம் என்பது தலைவிரித்தாடுகிறது. கடந்த ஆண்டும் இதேபோன்று சிறுமி ஒருவர் இவர்களின் தவறான கொள்கையினால் போதை ஆசாமியால் இரையாகி மாநிலம் முழுவதும் பல இடங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடித்தது, இருப்பினும் புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு அக்கறை காட்டவில்லை. இதனால் பல இடங்களில் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க தவறிய அரசு, தற்போது கல்வி நிலையங்களில் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசாக விளங்குகிறது. பல கல்வி வளாகங்கள் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி வருகிறது, இதை அரசு உடனடியாக காவல்துறையின் நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கல்வி வளாக விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். அதை அரசு தவறவிடாமல் முறையாக பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக விவகாரத்தில், நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவியை புகார் கொடுக்க விடாமல் மிரட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது. இருப்பினும், பல்கலைக்கழக நிர்வாகம் மூடிமறைக்காமல் காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி மாநில குழு வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.