திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர், அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாகப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தன்னுடைய நடவடிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரின் இத்தனை நாள் அமைதிக்குக் காரணம், இந்த பிரச்சனை பல்வேறு வடிவங்களில் சென்று பல சர்ச்சைகளுக்கு இடமளித்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்ய பா.ம.க. அனுமதி கேட்டபோது நீதியரசர் வேல்முருகன், இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்கிற வேலையை தமிழ்நாட்டில் சில கட்சிகள் செய்து கொண்டிருக்கிறது. தயது செய்து அதுபோன்ற வேலையைச் செய்யாதீர்கள் என்று கூறினார். நீதிமன்றம் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துக் கண்காணித்து வருகிறது. இப்படி இருக்கும்போது இந்த வழக்கை வேறொரு திசைக்கு இட்டுச் செல்வதற்காக அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பது சரியான நகர்வு இல்லை என நீதிமன்றமே கடிவாளம் போட்டும் யாரும் அதைக் கேட்காமல் அரசியல் செய்கின்றனர்.
முதலில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு தவறிவிட்டது என்று அரசைக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் குற்றவாளி மூன்று மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த குற்றவாளியை தி.மு.க. உறுப்பினர் என்று சொன்னார்கள். அவர் தி.மு.க. உறுப்பினர் இல்லை என நிரூபித்த பிறகு அடுத்தகட்டமாக தி.மு.க.-வில் ஒரு சார் இருக்கிறார், யார் அந்த சார்? என கேட்கத் தொடங்கினார்கள். ஒருபுறம் காவல்துறையும் நீதிமன்றமும் வழக்கை விசாரித்து வரும்போது இதில் எங்கிருந்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ‘உண்மையிலேயே இந்த விவகாரத்தில் சந்தேகம் இருக்கும் என்றால் அதை நீதிமன்றம் அமைத்த புலனாய்வுக் குழுவிடம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள்’ என்று கூறினார். பொள்ளாச்சி விவகாரம் குறித்துப் பேசினால் எதிர்க்கட்சியினரிடம் பதில் வருமா? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஒட்டுமொத்தமாக தி.மு.க.-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூட பத்திரிக்கையில் மாற்றித்தான் போடுவார்கள். அந்தளவிற்கு கண்ணியத்தைப் பாதுகாக்கிற நடைமுறையைத் தமிழ்நாடு பின்பற்றி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் நாகரீகத்துக்குப் புறம்பாக பெண்கள் குறித்துக் கவலைப்படாமல் அரசியல் செய்து வருகிறார். யார் அந்த சார்? என அவர் கேட்கும் நேரத்தில் சட்டப்பேரவைக்கு அந்த சார் உரையாற்ற வந்தார். அவரிடம் ஏன் யார் அந்த சார்? என பழனிசாமி கேட்கவில்லை. ஆளுநருக்குப் பின்னால் இருந்துகொண்டு யாரோ இதைச் செய்கிறார்களா? என்ற சந்தேகத்தை அனைத்து கட்சியினரும் கிளப்பியிருக்கிறார்கள். இந்த சந்தேகம் திடீரென வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மதுரை பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவி என்ற பேராசிரியை தான் யாருக்காக அதுபோன்ற வேலையைச் செய்தேன் என்று சொன்னார். யார் அந்த சார்? என அந்த விவகாரத்தில் தெரிந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், நேரடியாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் அவரை நியமித்த துணைவேந்தர். துணைவேந்தர் பொறுப்பு காலாவதியானதால் அவரை நியமிக்க வேண்டிய ஓடுகாலி ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டவர்கள் செய்திருக்கும் நிர்வாக சீர்கேடு எனச் சொல்லியிருக்கிறார் என்றார்.
பல்கலைக்கழக வளாகத்தில் 180 பேருக்கு அதிகமான காவலர்கள் தேவைப்பட்ட நிலையில் 140 காவலர்கள்தான் இருந்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்காமல் இருந்துள்ளது. இதற்கெல்லாம் ஓடுகாலி ஆளுநர்தான் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் இதுவரை வாய் திறக்கவே இல்லை. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் வந்து விசாரித்த பிறகு ஓடுகாலி ஆளுநரை சந்தித்திருக்கின்றனர். திருடன் கையில் சாவி கொடுப்பதைப்போல் அந்த சந்திப்பை நடத்தி இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் குற்றவாளி கைதுசெய்யப்பட்டது, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திருப்பது என அனைத்து விஷயத்திலும் தமிழ்நாடு அரசு துணை நின்றுள்ளது. தமிழ்நாடு அரசு இன்றைக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்னதுபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதில் கவனமாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது தேசிய மகளின் ஆணையம் முதலமைச்சரைத்தான் சந்தித்திருக்க வேண்டும். அவரை சந்திக்காமல் ஆளுநரை சந்தித்து பேசுகிறார்கள் என்றால் அதற்கு பின்பு அரசியல் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரிடம் யார் அந்த சார்? என கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வெளிநடப்பு குறித்து கேள்வி கேட்டால் அவர் வெளிநடப்பு செய்யவில்லை துரத்திவிட்டார்கள் என்று பொய்யை சொல்கிறார். முதுகெழுப்பு இருந்தால் இப்படி அவர் பேசியிருப்பாரா? பா.ஜ.க.-வை கூட எதிர்க்க வேண்டாம். ஆளுநரை எதிர்ப்பதற்காவது எடப்பாடிக்கு திராணி இருக்கிறதா? இந்த விவகாரத்தில் கேள்வி கேட்டவர்களைக் கன்னத்தில் அறையும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றி இருக்கிறார் என்றார்.