ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரிடம் இளங்கோவன் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் பெரியார் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மறைவைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை இளங்கோவன் அந்த தொகுதியில் நிறுத்தப்பட்டு 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உடல்நலக் குறைவு காரணமாக இளங்கோவன் காலமானார். இதைத்தொடர்ந்து தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
நாங்கள் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லி வந்தது. ஆனால் 2026 பொதுத்தேர்தலுக்கு முன்பு நடக்க உள்ள இடைத்தேர்தல் என்பதால் ஆளும் கட்சியான திமுக நேரடி போட்டியாக இருக்க வேண்டும் என்று திமுகவே போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவரான ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார்.
திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் அல்லது மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் வேட்பாளர் யார் என்பதை திமுக மேலிடம் அறிவிக்க உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.