தமிழகத்தில் கடந்த 2011 - 2016 காலகட்டங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், தற்பொழுது ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம், அன்றைய காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான ‘ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்’ என்ற நிறுவனம் 57 ஏக்கர் நிலத்தில் 24 பிளாட்டுகளாக 1400 க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிட்டார்கள். அந்த நிறுவனத்துக்கு கட்டட அனுமதி வழங்க ரூ.28 மோடி லஞ்சம் பெற்றதாக வைத்தியலிங்கம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில், வைத்தியலிங்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய மூத்த மகன் பிரபுவின் பெயரில் கணக்கிலடங்காத சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகவும், அதற்கு முன்பு வரை வைத்திலிங்கத்தின் மனைவி மற்றும் மூத்த மகன் பெயரில் ரூ.1,44, 91,000 சொத்து மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்தியலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகப்பிரபு மற்றும் அவரது உறவினர் பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அந்த வழக்கின் பேரில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.