பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் காது கேட்டமுடியாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை அடிப்படையாகக் கொண்டு இப்பட உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் லெனின் பாரதி தனது கருத்தை முன்வைத்து பாலாவை கடுமையக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க மற்றும் ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.