Skip to main content

ஏமன் விதித்த மரண தண்டனை; கைகொடுக்குமா ‘ப்ளட் மணி’ - காப்பாற்றப்படுவரா கேரள நர்ஸ்? 

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
Kerala nurse be spared from punishment imposed by Yemen

கேரள மக்கள் பெரும்பலனோர் வேலைக்காக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஊதியம் அதிகம் என்பதால் குடும்ப வறுமையின் காரணமாக உறவுகளை பிரிந்து வேலைக்குச் செல்கின்றனர். அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்கு வறுமையின் காரணமாக கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா  கடந்த 2008 ஆம் ஆண்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு பல்வேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த நிமிஷா பிரியா, ஏமனில் சொந்தமாக ஒரு க்ளினிக் தொடங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆனால் ஏமன் நாட்டின் சட்டத்தின்படி ஒருவர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்றால், அதில் உள்நாட்டைச் சேர்ந்தவரின் பங்கு இருக்க வேண்டும். அதனால், நிமிஷா ஏமன் நாட்டை சேர்ந்த  தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் பங்குதாரர் அடிப்படையில் ஒரு க்ளினிக்கை திறந்துள்ளார். தொடர்ந்து க்ளினிக் நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிலையில் சில காலம் கழித்து, நிமிஷாவை ஏமாற்றி அவரது சொத்துகளை  தலால் அப்தோ மஹ்தி அபகரித்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் தலால் அப்தோ மஹ்தி, நிமிஷா பிரியாவின் பாஸ்போட்டை பிடிங்கி வைத்துக்கொண்டு உடல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். 

இதனால்  அதிர்ச்சியடைந்த நிமிஷா இதுகுறித்து ஏமன் நாட்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், நிமிஷா கூறிய புகார் பொய் என்று போலியான ஆதாரங்களைத்  தலால் அப்தோ மஹ்தி போலீசாரிடம் காட்டியுள்ளார். அதன்பின் தவறாக குற்றம்சாட்டியதற்காக ஒருவரம் நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த நிமிஷா,  தலால் அப்தோ மஹ்தியிடம் இருந்து எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும் என்பதற்காக  தலால் அப்தோ மஹ்தித்திற்கு மயக்க மருந்தை ஊசியின் வழியே செலுத்தியுள்ளார். ஆனால் மயக்கம் மருந்து ஓவர் டோஸ் ஆனதால்  தலால் அப்தோ மஹ்தி உயிரிழந்துள்ளார். 

இந்த கொலை வழக்குத் தொடர்பாக நிமிஷா கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து நிமிஷா தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே ஏமனில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், ஏமன் அதிபர் நிமிஷாவிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

அதேசமயம் ஏமன் நாட்டில் ஷரியா சட்டம்(sariya act) அமலில் இருப்பதால், குறுதிப் பணம்(Blood money) வழங்கிய பிறகு தலால் அப்தோ மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஷரியா சட்டம் தியா(Blood money) மூலம் ஒருவர் வழக்கில் தன்னை அறியாமல் தவறு செய்யும் பட்சத்தில், அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கி பின் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினால் தண்டனையை குறைக்கவோ அல்லது முழு தண்டனையை ரத்து செய்யவோ வாய்ப்பு உள்ளது. இது ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நிமிஷாவை மீட்டு இந்தியா அழைத்து வர வேண்டும் என்று அவரது தாய்  மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். அதேபோன்று #SaveforNimisha.. என்ற ஹேஷ்டாக்கும் சர்வதேச அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்த விவகாரத்தை கவனித்து வருகிறோம். சட்டப்படி அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே, அதை அனைத்தையுமே இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அதிபர் நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்ததால் ஜனவரி மாதம் இறுதிக்குள் அவரை தூக்கிலிட வாய்ப்பு இருப்பதாகக்  செய்திகள் வெளியான நிலையில், இது முற்றிலும் தவறான தகவல் என்று ஏமன் தூதரகம் மறுத்துள்ளது. மேலும், ஏமன் நாட்டின் அதிபர் ரஷித் அல்-அலிமி நிமிஷாவின் மரண தண்டனை தற்போது வரை உறுதி செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளது. இந்த சூழலில்தான் மரண தண்டனையில் இருந்து நிமிஷா மீட்கப்படுவாரா என்று அவரை போன்றே பலரும் காத்திருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்