தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (14.04.2021) அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே.நகர், ஆதம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அசோக்நகர், மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, பாரிமுனை, மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆர்.ஏ.புரம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழையினால் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் காரைக்கால், புதுச்சேரியிலும் மூன்று மணி நேரத்திற்கு மழை பொழிவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.